கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அதேபோல் பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கரூர் மாவட்டம் மேற்கு செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு பேரும் காவல்துறை பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பொழுது இரண்டு நிர்வாகிகளின் குடும்பத்தினரும் கதறி அழுதனர். குறிப்பாக மாவட்டச் செயலாளர் மதியழகனின் மனைவி ராணி, கண்ணீர் விட்டு அழுதார்.