தமிழக சட்டமன்றக் கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று (15/10/2025) பேரவையிபிருந்து வெளிநடப்பு செய்தது அதிமுக
சட்டமன்றதில் பேரவை விதி 56-ன் கீழ், கரூர் விவகாரம் குறித்து அதிமுக கேள்வி எழுப்பியபோது, திமுக அரசு உரிய பதில் அளிக்கவில்லை. அதேசமயம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமைச்சர் சிவசங்கர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக்கோரி அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதனை சபாநாயகர் ஏற்கவில்லை என்றதும் அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
பேரவைக்கு வெளியே, செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ’’அதிமுக சார்பாக சட்டப்பேரவையில் விதி 56ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தோம். கோரிக்கையை நான் ஏற்கிறேன், அதே சமயத்தில் முதல்வர் ஒரு சில விளக்கம் அளிப்பார்கள் என்று சபாநாயகர் குறிப்பிட்டார். கரூர் சம்பவம் குறித்து பிரதான எதிர்க்கட்சி அதிமுக கருத்துகள் தெரிவித்த பின்னர் முதல்வர் பதிலளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்றேன். ஆனால், முதல்வர் பேசுவதற்கு அனுமதி கொடுத்தார் சபாநாயகர்.
இது முக்கிய பிரச்னை என்பதால் சபாநாயகர் பேச்சுக்கு மதிப்பளித்து முதல்வர் கருத்தை கேட்டோம். முதல்வர், திமுக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார். அதன்பின் நான் பேசும்போது, 27-9-25 அன்று வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் மக்கள் சந்திப்பில் பேசும்போது செருப்பு வந்து விழுகிறது, அதைப்பற்றி அரசு எதுவுமே சொல்லவில்லை. அதன்பிறகு கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்துள்ளனர். அதோடு, ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி என்று அரசு பார்க்கிறது. இந்த அரசுடைய அலட்சியத்தால் 41 பேர் இறந்ததாகப் பேசினேன். அவற்றை எல்லாம் நீக்கிவிட்டதாக தெரிகிறது.
ஏற்கெனவே 4 மாவட்டத்தில் விஜய் கூட்டத்தை நடத்தி இருக்கிறார். எவ்வளவு மக்கள் பங்கு பெறுவார்கள் என்று காவல்துறை, உளவுத்துறைக்கு தெரியும் . அதற்கு ஏற்றவாறு இடத்தை ஒதுக்கியிருக்கலாம், அதற்கு ஏற்றவாறு காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.
காவல்துறை அதிகாரி பேட்டியில், 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக சொன்னார், ஊடகத்தில் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அத்தனை பேர் நிற்கவில்லை. ஏடிஜிபி பேட்டி கொடுக்கும்போது 500 பேர் என்கிறார், முதல்வர் 606 பேர் என்கிறார். இதனால்தான் மக்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் எழுந்திருக்கிறது.
வேலுச்சாமிபுரத்தில், எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்த அதிமுக இடம் கேட்டபோது கொடுக்கவில்லை. வேலுச்சாமிபுரம் குறுகிய சாலை என்பதால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட இடம். எழுச்சிப் பயணத்தின்போது கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், நீதிமன்றம் சென்றோம், அவர்கள் நிராகரித்த இடத்தையே எங்களுக்கு கொடுத்தனர். அதே இடத்தை தான் தவெகவுக்கும் கொடுத்தனர்.
ஏற்கெனவே மக்கள் கூட்டம் எப்படி கூடுகிறது என்பதை பார்த்தும், வேலுச்சாமிபுரத்தை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரசின் அலட்சியத்தால் தான் நடைபெற்றது. அவசர அவசரமாக ஒருநபர் கமிஷன் அறிவித்தனர். அவசரமாக உடற்கூராய்வு செய்கின்றனர். கரூர் மருத்துவமனையில் 2 டேபிள்தான் இருக்கிறது, அமைச்சர் 3 என்கிறார், 3 என்றே வைத்துக்கொள்ளலாம், 3 டேபிளில் எப்படி 39 பேருக்கு உடற்கூராய்வு செய்ய முடியும்? வெளியிலிருந்து 22 பேரை வரவழைத்தாலும் 3 டேபிளில் எப்படி செய்ய முடியும்? ஒரு உடலை உடற்கூராய்வு செய்ய ஒன்றரை மணி நேரம் ஆகும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படியிருக்கும் போது இவ்வளவு விரைவாக எப்படி செய்ய முடியும்? என்று கேட்டால் ஏதேதோ பதில் சொல்கிறார்கள்.
கரூர் சம்பவம் குறித்து ஏடிஎஸ்பி விசாரணை தொடங்கினார். ஒரு நபர் கமிஷன் தலைவர் ஒரு உதவியாளர் கூட இல்லாமல் சென்று ஆய்வு செய்கிறார். உதவியாளர் இல்லை, அலுவலகம் இல்லை. உடனே மதியம் ஒரு மணிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்க்கிறார், விவரத்தை யார் பதிவு செய்வது? தலைமைச் செயலகத்தில் பொறுப்பு டிஜிபி, ஏடிஜிபி பேட்டி கொடுக்குறார்கள். அரசு திட்டங்களை எடுத்துச் சொல்லத்தான் நியமித்தனர். ஆனால் தவெக தலைவர் இதையெல்லாம் பின்பற்றியிருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறினர். ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்ட பின் எப்படி கருத்து சொல்லலாம்? கமிஷனிடம் தானே சொல்ல வேண்டும். அப்புறம் எப்படி கமிஷன் நேரமையாக நடக்கும்?
ஏடிஜிபி ஒரு கருத்தை சொல்கிறார், அவருக்கு கீழே ஏடிஎஸ்பி இருக்கிறார், அவர் எப்படி விசாரிப்பார்? இவ்வளவு பதற்றம் ஏன்? மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது. அலட்சியம், பாதுகாப்பு குறைபாடு காரணமாகத்தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது.
பிரதான எதிர்க்கட்சி பேசும், அரசு பதிலளிக்கும். இன்று அதற்கு மாறாக முதல்வர் முதலில் பேசுகிறார் என்றால், இதில் ஏதோ நடந்திருக்கிறது. சிபிஐ விசாரணையை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பார். அதனாலே பதற்றம். செருப்பு வீச்சு, மின்விளக்கு அணைப்பு, தடியடி எல்லாம் விசாரணையில் வரும். இந்த ஆட்சியில் நடந்த தவறை மறைப்பதற்காக ஏதேதோ பேசுகிறார்.
நானும் கட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை, தமிழர் உணர்வோடு தான் பேசுகிறேன். வேண்டுமென்றே திட்டமிட்டு மர்மத்தை மறைக்கத்தான் ஒவ்வொரு அமைச்சராக இடைமறித்து கருத்தைச் சொன்னார்கள். பிரபலமானவர்கள் வரும்போது கூட்டம் வரும்தான். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை.
நான் கரூர் சென்றபோது ஆம்புலன்ஸில் திமுக மருத்துவர் அணி என்று இருந்தது. ஏன் அரசு ஆம்புலன்ஸ் இல்லையா? 4 இடங்களில் ஏற்கெனவே கூட்டம் நடந்திருக்கிறது,. கூட்டத்துக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசு, இதனை சரிசெய்யுங்கள் என்று சொல்ல வேண்டும். இவ்வளவு மருத்துவரை அழைக்கிறீர்கள், 41 குளிர்சாதனப் பெட்டி வரவழைக்க முடியாதா? ஏதோ சாக்குப்போக்கு சொல்லி சமாளிக்கிறார்கள்.
நீதிமன்ற தீர்ப்புக்குள் நாங்கள் செல்லவில்லை. என்ன குறைபாடு, எதை சரி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றுதான் பேசினோம். அதுக்கு தகுந்த விளக்கம் கொடுக்கவில்லை, இந்த அரசின் அலட்சியம்தான் 41 உயிர் பறிபோகக் காரணம்” என்று ஆவேசப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி.