Karur traffic jam incident - CBI touches on a crucial point Photograph: (cbi)
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைமை அலுவலகம் உள்ள பனையூரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். அதேபோல் கரூர் பகுதியிலும் பொதுமக்கள், கடைக்காரர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் வரவழைத்து அவர்களுக்கு விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசலில் கணவனை இழந்த சங்கவி என்ற பெண், விஜய் நேரில் வந்து ஆறுதல் சொல்லாததால் அக்கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட நிவாரணத் தொகை 20 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்பியிருந்ததும் பேசு பொருளாகி இருந்தது.
இந்நிலையில் இன்று மூன்று பெண் சிபிஐ அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து உயிரிழந்த 41 பேர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஒரே வீட்டைச் சேர்ந்த கோகிலா, பழனியம்மாள் என்ற இரண்டு சிறுமிகள் உயிரிழந்த வீட்டுக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரிடம் நடத்தப்படும் விசாரணை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Follow Us