கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களின் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள 04324 259306 , 7010806322 (வாட்ஸ் அப்) உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பிரச்சாரத்தின் போது உயிர்காக்கும் பிஎல்எஸ் ஆம்புலன்ஸ் இல்லாததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது. தற்போது வரை 111 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கரூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறந்தவர்கள் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்க கூடிய பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பிலிருந்து இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர் என நாட்டின் முக்கிய தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 14 பேர் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல்களை பிரேதப் பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் ஒரு பெண் உடல் மட்டும் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளது.
சம்பவ இடத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 9 குழந்தைகள் 17 பெண்கள் என மொத்தமாக 39 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் நான்கு பெண் குழந்தைகள், ஐந்து ஆண் குழந்தைகள் என மொத்தம் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். திருப்பூர் சேர்ந்த இரண்டு பேர், திண்டுக்கல்லை சேர்ந்த இரண்டு பேர் பலியாகி உள்ளனர். கரூரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.ஹேமலதா, சாய் லக்ஷனா, சாய் ஜீவா எனும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், இரண்டு மகள்கள் உயிரிழந்துள்ளனர். அதேபோல இதில் ஈரோடு, சேலம், காங்கேயம், திண்டுக்கல்லை என அருகிலுள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த இரண்டு வயது குழந்தை குரு விஷ்ணு உயிரிழந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் விவரங்கள்: தாமரைக்கண்ணன், ரேவதி (52), கரூரைச் சேர்ந்த தனுஷ் குமார் (24), வடிவேல் (54), சந்திரன் (40), மனோஜ் வர்ஷன் (13), ரமேஷ் (32), ரவி கிருஷ்ணன், மகேஸ்வரி (45), பழனியம்மாள் (11), கோகிலா (14), அஜித் (21), மாலதி (36), சுமதி (50), மணிகண்டன் (33), சதீஷ்குமார் (34), கிருத்திவிக்யாதவ் (7),ஆனந்த் (26), சங்கர் கணேஷ் (45), விஜய ராணி (42), கோகுல பிரியா( 28), பாத்திமா பானு (29), கிஷோர் (17), ஜெயா (55) என தகவல்கள் வெளியாகியுள்ளது.