கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் என பலர் இடம் பெற்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக கரூர் பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்ட பகுதியில் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இரண்டு காவல் வேன்கள் மற்றும் காரில் வந்திருந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் கரூர் வேலுசாமிபுரத்தில் சிதறிக்கிடந்த காலணிகள் போலீசார் விசாரணைக்காக அகற்றப்படாமலேயே இருந்தது. தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் காலணிகள் விசாரணைக்கு தேவைப்படலாம் எனவே அவற்றை பத்திரப்படுத்த வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவை பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சி சார்பாக வேலுசாமிபுரத்தில் சிதறிக்கிடந்த சுமார் 450 கிலோ எடை கொண்ட காலணிகள் சேகரிக்கப்பட்டு மாநகராட்சி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு பாலம்மாள்புரத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.