கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
நேற்று கரூர் சம்பவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் சேலத்தை சேர்ந்த ஒருவர் சரணடைந்திருந்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது மயங்கி கீழே கிடந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் உள்ளே சென்ற நிலையில் கூட்டத்தை இடையூறு செய்வதற்காக ஆம்புலன்ஸ் நுழைவதாக எண்ணி சேலத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில் மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் நேற்று கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் சரணடைந்திருந்தார்.
இந்நிலையில் கரூர் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் என்பவரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நிலையில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அனுமதி கேட்ட நிலையில் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.