கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்.பி. விமலா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. அதன்படி ஐ.ஜி. அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் எனப் பலர் இடம் பெற்றுள்ளனர். 

Advertisment

அந்த வகையில் இந்த குழுவினர் கடந்த சில நாட்களாகக் கரூர் பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்குத் தடை விதிக்க கோரி த.வெ.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

Advertisment

அதாவது சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகத் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் இந்த மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ‘தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கை இன்று (08.10.2025) காலை விரைந்து விசாரிக்க வேண்டும். கரூர் விவகாரத்தில் உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும். இது தொடர்பாக உரிய விசாரணை நடைபெற வேண்டும். எனவே சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை என்பது முறையாக நடைபெறாது’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.