தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், தவெகவைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்களை விசாரிக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.