karur Photograph: (police)
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், தவெகவைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழந்த 41 பேரின் உடல்களுக்கும் உடற்கூறாய்வு முடிந்து உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேதப் பரிசோதனை முடிவுகள் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உயிரிழந்தவர்கள் பெரும்பாலோனோர் இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் மூச்சு விட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டதால் உயிரிழப்புகள் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 25 பேர் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை மூச்சுவிட முடியாததன் விளைவாக உயிரிழந்துள்ளனர்.10-க்கும் மேற்பட்டோர் தள்ளுமுள்ளுவில் ஒருவர் மேல் ஒருவர் மிதித்து ஓடியதன் காரணமாக விலா எலும்பு உடைந்து உள்ளுறுப்புகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக உயிரிழந்துள்ளது தெரிய வந்திருக்கிறது.