தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025)  கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், த.வெ.க.வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

Advertisment

இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஆனந்த் மற்றும் சி.டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

முன்னதாக ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரை பிடிப்பதற்காக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.இந்நிலையில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 100 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்யின் வாகனம் வந்தபோது ஏற்பட்ட அந்த நெரிசலில் இருந்து தப்பித்தவர்கள், அச்சமயத்தில் அங்கு வீடியோ எடுத்தவர்கள், எக்ஸ், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்து வீடியோ ஆதாரத்தின் மூலமாக, விஜய்யின் பரப்புரை வாகனத்தில் இருந்த பணியாளர்கள், பாதுகாவலர்கள், செய்தியாளர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு விசாரணை நடத்தப்பட்ட 100 பேரிடமும் எழுத்துப் பூர்வமான வாதமும், வாக்குமூலமாகவும், வீடியோ மூலமாகவும் ஆதாரங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் சிலரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment