கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையிலான இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் காவல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் என பலர் இடம் பெற்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக கரூர் பகுதியில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்ட பகுதியில் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இரண்டு காவல் வேன்கள் மற்றும் காரில் வந்திருந்தனர். சம்பவம் நடந்த பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/08/a5449-2025-10-08-17-29-31.jpg)
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் சேலத்தை சேர்ந்த ஒருவர் சரணடைந்துள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது மயங்கி கீழே கிடந்தவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் உள்ளே சென்ற நிலையில் கூட்டத்தை இடையூறு செய்வதற்காக ஆம்புலன்ஸ் நுழைவதாக எண்ணி சேலத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில் மணிகண்டனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மணிகண்டன் தற்போது கரூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் சரணடைந்துள்ளார்.