தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், மதிமுகவின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள், பெண்கள் உட்பட 40 பேர் உயிர் இழந்தார்கள் என்ற செய்தியும், 50க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதும் கேள்விப்பட்டு பதறிப் போனேன்.

Advertisment

karur-durai--vaiko-stampede-2

கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்தம் உறவினர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இத்துயர சம்பவத்தை எதிர்கால படிப்பினையாகக் கருதி அரசியல் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், ஆன்மிக கூட்டங்கள் என திரளான மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு இது போன்ற உயிர் இழப்புகளை தவிர்க்க சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்டும், காவல்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டு பதிவிட்டிருந்தேன். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற கரூருக்கு விரைந்து செல்லுமாறு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அறிவுறுத்தல்படி,  (நேற்று மாலை- 28.09.2025) நான் கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களின் நிலையையும் மருத்துவர்களிடம் விசாரித்தேன்.

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்க வருகின்றவர்கள், பெரும் கூட்டமாக வரும்போது, அவர்களுக்கு தொற்று உண்டாகும் என்பதை அதிகாரிகளை அழைத்து அறிவுறுத்தினேன். இதைக்கட்டுப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டேன். இதனைத் தொடர்ந்து  ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்களிடமும் இதுகுறித்த எனது கவலையை பகிர்ந்து கொண்டேன். பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பவர்களின் துயர சம்பவங்கள் நாடு முழுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது பலர் உயிரிழந்தார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 80 பேர் உயிரிழந்தனர். அரசியல் நிகழ்வுகள், ஆன்மீகக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளில் இது போன்ற துயர சம்பவங்கள் நடந்தேறி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. 

Advertisment

karur-durai--vaiko-stampede-1

ஆகவே, இது போன்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பை தவிர்க்க பொதுமக்களும், பெண்களும் போதிய விழிப்புணர்வு பெற வேண்டும் என கவலையுடன் கேட்டுக்கொண்டேன். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டிய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், காவல் துறையினர், அரசு அதிகாரிகள்,  தன்னார்வலர்கள், அனைத்து அரசியல் கட்சியினர், குறிப்பாக மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த அத்துனை பேருக்கும் மதிமுக சார்பிலும்,  வைகோ சார்பிலும் இதய அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்தச் சந்திப்பின்போது மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், துணைப் பொதுச்செயலாளர்கள் ஆடுதுறை இரா.முருகன்,  ரொஹையா, கரூர் மாவட்டச் செயலாளர் ஆசை சிவா உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.