கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் (தீர்ப்பின் நகல்) வெளியாகியுள்ளது. அதில், “இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இதனைக் கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி தலைமையில் கண்காணிப்புக் குழு நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் மாநில அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு நபர் ஆணையம் இதுவரையில் சேகரித்த ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை, தனது விசாரணை முன்னேற்ற அறிக்கை, டிஜிட்டல் ஆவணம் உள்ளிட்ட ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால் விசாரணைக் குழு மற்றும் ஒரு நபர் ஆணையத்தின் செயல்பாடுகள் ரத்து செய்யப்படுகின்றன. மாநில அரசு, உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு ரத்து செய்யப்படுகிறது. தமிழ்நாடு அரசு கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் அனைத்து வகையான ஒத்துழைப்பையும் சி.பி.ஐ.க்கு வழங்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணையைக் கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட குழு கரூர் விவகாரம் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளலாம். இந்த விசாரணை என்பது சுதந்திரமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம் அமைத்த மேற்பார்வைக் குழு தனது வழக்கு தொடர்பாக சிபிஐ திரட்டிய ஆதாரங்களை ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் ஏதேனும் ஒரு வகையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளோ, அறிவுறுத்தல்களோ, பரிந்துரைகளோ தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். கரூர் விவகாரத்தின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அமைத்த மேற்பார்வைக் குழுவானது தனது முதல் கூட்டத்தை வெகு விரைவில் நடத்த வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், காவல் துறையினர் அணுகிய விதம் குறித்து பல்வேறு ஆழமான சந்தேகங்களை எழுப்புகிறது. அதிலும் குறிப்பாகத் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கியது, கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அதன் பிறகு அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பை நடத்தியது என பல்வேறு விஷயங்களில் சந்தேகங்கள் வலுவாக எழுகிறது. இந்த சம்பவம் மிகவும் துரதஷ்ட வசமானது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருக்கக்கூடிய 2 ஐபிஎஸ் அதிகாரிகள் யார் என்பதைக் குழுவிற்குத் தலைமை தாங்கும் நீதிபதியான அஜய் ரத்தோகியே முடிவு செய்வார்.
மாநில அரசின் அரசு இயந்திரத்தின் மீதான கட்டுப்பாட்டை ஆளும் கட்சி கொண்டிருக்கிறது. அவர்கள் முறையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது. கரூரில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் உள்ள மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. மிக விரைவில் சிபிஐ தனது விசாரணையைத் தொடங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.