கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 தினங்களாக சம்பவம் நடைபெற்ற இடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதாவது சுமார் இரு கிலோமீட்டர் தொலைவிற்கு முப்பரிமாண லேசர் ஸ்கேனர் கருவி மூலம் அளவீடு செய்யப்பட்டது.
அதன்படி ஒரு கிலோமீட்டரில் ஒவ்வொரு 5 அடி இடைவெளியிலும் கருவியை வைத்து துல்லியமாகத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில் கரூரில் உள்ள சிபிஐயின் தற்காலிக அலுவலகமாகச் செயல்பட்டு வரும் சுற்றலா மாளிகையில் 7 பேர் இன்று (02.11.2025) விசாரணைக்கு ஆஜராகினர். அதன்படி வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர், மளிகைக் கடை உரிமையாளர்கள், டெய்லர்கள், மெக்கானிக் என 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Follow Us