கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகப் பிரச்சாரத்தின் போது பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு த.வெ.க. சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணமாகக் கொடுக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திடமும் வீடியோ காலில் பேசிய விஜய், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, “நிச்சயம் கரூர் வந்து அனைவரையும் சந்திப்பேன்” என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், சம்பவம் நடந்து பல நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து, விஜய் எப்போது பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துத் துக்கத்தில் பங்கேற்பார் என்ற கேள்வியும் விமர்சனமும் எழுந்தது.
இந்த நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சென்னை அழைத்து வந்து சந்திக்கலாம் என்று விஜய் முடிவு செய்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட 38 குடும்பங்களில் 35 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் விஜயைப் பார்க்கச் சம்மதம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் சொகுசு பேருந்துகள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். மீதமுள்ள 3 குடும்பத்தினர் விஜயுடனான சந்திப்பை நிராகரித்துள்ளனர். அதனால், சென்னை வந்த 35 குடும்பத்தினரையும் மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் வைத்து 27 ஆம் தேதி அன்று தவெக தலைவர் விஜய் நேரில் ஆறுதல் கூறினார்.
ஒவ்வொரு குடும்பத்தையும் தனித்தனியாகச் சந்தித்து, அவர்களின் துக்கத்தில் பங்கெடுத்து ஆறுதல் கூறிய விஜய், அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவுகள், வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றைத் த.வெ.கவே ஏற்கும் என்று உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், “இங்கு அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்; நிச்சயம் உங்களை கரூரில் வந்து சந்திப்பேன்” என்று கண்ணீர் வடித்திருக்கிறார்.
இந்த நிலையில் விஜயைச் சந்தித்து பிறகு கரூர் வந்த குடும்பத்தினர் சிலர் அங்கு நடந்த சம்பவம் குறித்துப் பேசியிருக்கின்றனர். அப்போது உயிரிழந்த சந்திராவின் உறவினர் ஒருவர் பேசுகையில், “எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும், காப்பீடு மற்றும் கல்விச் செலவு உள்ளிட்ட எந்த உதவியாக இருந்தாலும் அதைச் செய்து தருவதாக விஜய் எங்களிடம் தனித்தனியாகப் பேசினார். கரூரில் உயிரிழந்த குடும்பத்தினரிடம் சென்னை வரவழைத்துப் பேசுவதற்கு காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டார்” என்று தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய மற்றொரு குடும்பத்தினர், “நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் உள்ளே சென்றதுமே, விஜய் எங்களிடம், ‘மன்னித்துவிடுங்கள்’ என்றுதான் கூறினார். ‘உங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள், தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருகிறேன்’ என்றார். கண்ணீர் விட்டு அழுதார். எங்களது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ‘எங்கள் மீது தவறு இருக்கிறது. நீங்கள் சொல்லியும் கேட்காமல் குழந்தைகளைக் கூட்டிவந்து எங்களுடைய தவறுதான். எங்களையும் மன்னித்துவிடுங்கள்’ என்று கூறினோம். அவர் கையெடுத்துக் கும்பிட்டு அழுதுவிட்டார். நாங்கள் கூட தெம்பாக இருக்கிறோம்; ஆனால் அவர் கவலையாகத்தான் இருந்தார். சாப்பிட்டாரோ, இல்லையோ தெரியவில்லை, பாவம் ரொம்ப இழைத்துவிட்டார்” என்று கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/28/untitled-1-2025-10-28-18-37-08.jpg)