கைது செய்யப்பட்ட தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். தற்போது கைது செய்யப்பட்ட மதியழகன் கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் மதியழகன் மருத்துவ பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
அதேபோல் பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தவர் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பவுன்ராஜ் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வந்துள்ளது. தற்போது இருவரையும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.