கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் உள்ள நிலையில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 9ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு அனுமதி கேட்ட நிலையில் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி காவலில் எடுக்கப்பட்ட மதியழகனிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இரண்டு நாட்கள் முடிந்து மீண்டும் மதியழகன் மீண்டும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மேலும் 14 ஆம் தேதி வரை மதியழகனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதியழகன் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.