தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இதன்படி அருணா ஜெகதீசன் நேற்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தார். இதனையடுத்து ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், தவெகவைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கரூர் துயர சம்பவம் குறித்து எழுதி வைத்துவிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட விற்பட்டு பகுதியைச் சேர்ந்த த.வெ.க. கிளைச் செயலாளர் ஐயப்பன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரது உடலையும், அவர் எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில், “இதற்கு முக்கிய காரணம் செந்தில் பாலாஜி” என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் இந்த சம்பவம் குறித்து த.வெ.க.வின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அதாவது, கொலைக்குத் துணை போகுதல், குற்றமற்ற கொலை முயற்சி, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிந்தும் அலட்சிய போக்குடன் செயல்படுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் இருத்தல், பொதுச் சொத்துக்குச் சேதத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் மதியழகனை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கரூர் ஏ.எஸ்.பி. பிரேமானந்த தலைமையில் 5 தனிப்படையினர் மூலம் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பலர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/29/siren-police-2025-09-29-23-27-29.jpg)