தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

Advertisment

அதன்படி அருணா ஜெகதீசன் சம்பவ இடத்தில் (வேலுசாமிபுரம்) இன்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினார். இந்நிலையில் கரூர் நெரிசல் சம்பவத்தை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்கக் கோரி த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தத் துயரச் சம்பவத்தைத் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் மனு அளித்துள்ளார். 

Advertisment

முன்னதாக சி.டி. நிர்மல் குமார் இந்தச் சம்பவத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று இன்று காலை கூறியிருந்தார். இது தொடர்பாக நீதிபதி தண்டபாணியைச் சந்தித்து முறையிட்டிருந்தார். இது குறித்து உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நாளை (29.09.2025) மதியம் 02:15 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.