தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அருணா ஜெகதீசன் நேற்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தார். இதனையடுத்து ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2வதாக புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கூட்ட நெருக்கடியில் உயிரிழந்தவர்கள் மயக்கம் அடைந்தவர்களைக் காப்பாற்ற வந்த ஆம்புலன்ஸ் டிரைவரை 10க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈஸ்வரமூர்த்தி என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்துள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர வேண்டும் என்று கேட்டதன் அடிப்படையில் அமராவதி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் எடுத்து வந்தேன். அதன்படி ஒரு பெண், 2 ஆண்களை அரை மயக்க நிலையில் தனது ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு சென்றேன். அதன்படி மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள் அவர்களைப் பரிசோதித்துப் பார்க்கும் போது 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக இருவரின் உடல்களையும் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றேன்.
அதோடு மீண்டும் சம்பவ இடத்திற்குச் சென்று மற்றவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று ஆம்புலன்ஸில் வரும்போது தன்னை 10 பேர் கொண்ட கும்பல் கருப்பு காரில் இருந்து இறங்கி கடுமையாகத் தாக்கினர். ஆபாசமாகவும் பேசினர். ஆபாசமாகத் திட்டினர். ஆம்புலன்ஸை உடைத்தனர். நான் உயிரைக் காப்பாற்ற வந்தேன் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் எனத் தெரிவித்த போதும் தன்னை கடுமையாகத் தாக்கினர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிரமாகத் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.