Karur District Secretary Mathiyazhagan and two others released Photograph: (tvk)
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த சம்பவத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதேசமயம் கூட்ட நெரிசலில் சிக்கிப் பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (13.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள், “ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.
அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும். விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை அஜய் ரஸ்தோகி முடிவு செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை கரூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரத்குமாரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் ஒப்படைத்துள்ளனர்.
முன்னதாக இந்த சம்பவத்தில் கரூர் மாவட்டச் செயலாளர், மதியழகன், நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். மதியழகனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். நேற்றுடன் இருவருக்குமான நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் ஒருநாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இன்று (15/10/2025) காலை மீண்டும் இருவரும் கருர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்பொழுது சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பு வழக்கறிஞர்களும், தமிழக வெற்றிக் கழகம் தரப்பு வழக்கறிஞர்களும் காரசார விவாதம் நடத்தினர். சிபிஐ விசாரணையை கையில் எடுக்கும் வரை காவல் நீட்டிப்பு வேண்டும். தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதேநேரம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் வழக்கறிஞர்கள் வைத்த வாதத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி சிறப்புப் புலனாய்வுக்குழு களைக்கப்பட்டுள்ளது. எனவே காவல் நீடிப்பு கேட்பது தவறு என்ற வாதத்தையை முன் வைத்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.
இந்நிலையில் தற்பொழுது கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜா இவருக்கும் காவல் நீட்டிப்பு இல்லை என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நீதிபதியின் உத்தரவு நகல் கிடைத்த பிறகு சிறை நடவடிக்கைகள் முடிந்து நாளை இருவரும் வெளியே வர உள்ளனர்.