பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று (02-11-25) சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மதிமுக, விசிக, தவாக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நாதக, தவெக, பா.ம.க ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதற்கிடையில், வாக்காளர் பட்டிய்ல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பா.ஜ.கவுக்கு கண்டனம் தெரிவித்த அவர், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சி, தி.மு.க. அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும் என்றும் திமுக அரசை விமர்சித்துக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், திமுக தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற பின்பு, நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை இயக்கத் தலைவருமான கருணாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், திமுக மீது விஜய் வைத்த விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கருணாஸ், “இது அவருடைய அரசியல் அறியாமையை தான் காட்டுகிறது. இது எவ்வளவு பெரிய பாதிப்பை உருவாக்க போகிறது என்பதைக் கூட அவருக்கு தெரியவில்லை. ஏற்கெனவே அவருக்கு பாசிசதத்துக்கும் பாயாசத்துக்கும் வித்தியாசம் தெரியாது. இது வெறும் வாக்குரிமைகளை நீக்குவதற்கான நோக்கம் இல்லை, குடியுரிமையை இழப்பதற்கான ஒரு முயற்சி தான் என்பது எங்களுடைய குற்றச்சாட்டு. வரக்கூடிய காலங்களில் தமிழகத்தை ஒரு நாதியற்ற ஒரு கூட்டமாக மாற்றுவதற்கான ஒரு முயற்சி என்பதை கூட உணராமல் அறியாமல் யாரோ எழுதி கொடுப்பதை படித்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே அவரும் தமிழர் என்ற நிலையில் மிகவும் வேதனையாக இருக்கிறது.
இதில் என்ன நாடகம் இருக்கிறது? யார் மேல் குற்றச்சாட்டு இல்லை. எல்லார் மேலும் தான் இருக்கிறது. ஆனால், எந்த நேரத்தில் எது முக்கியமான விஷயமோ அதில் அரசியல் பார்க்கிற ஒரு கேவலமான ஒரு மனநிலை இங்கே இருக்கிறது. அதை அவர்கள் மாற்றிக்கொள்வது நல்லது. விஜய்க்கு அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்க்காமல் பனையூரில் அழைத்து பார்ப்பவர் கிட்ட நீங்க இதெற்கெல்லாம் வாங்க என்று சொன்னால், வருவாரா? சூட்டிங் எதாவது இருந்தா கூப்பிடுங்க வருவார்” என்று காட்டமாக பேசினார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/02/vijaykaruna-2025-11-02-18-27-19.jpg)