கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் காணாமல் போன புகாரில், அடுத்தடுத்து வெளியான உண்மைகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், தியாகடகட்டாவைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் திடீரென காணாமல் போனார். இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள், இதுதொடர்பாக சன்னகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சந்தோஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, அடுத்தடுத்து வெளியான மர்மங்கள் காவல்துறையினரையே திகைக்க வைத்தன.
லட்சுமிக்கும், அன்னபுரா கிராமத்தைச் சேர்ந்த நிங்கப்பாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், நீண்ட நாட்களாக இருவருக்கும் குழந்தையில்லாமல் இருந்திருக்கிறது. இதன் காரணமாக இருவரும் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டபோது, நிங்கப்பாவிற்கு குழந்தை பெறுவதில் குறைபாடு இருந்தது தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது
இந்நிலையில், லட்சுமி திடீரென கர்ப்பமாகியுள்ளார். ஆனால், தனக்கு குறைபாடு இருக்கும்போது மனைவி லட்சுமி எவ்வாறு கர்ப்பமானார் என்று நிங்கப்பாவிற்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து மனைவியிடம் விசாரித்தபோது, நிங்கப்பாவுடன் தோட்டத்தில் வேலை செய்யும் அவரது நண்பர் திப்பேஷ் நாயக் என்பவருடன் லட்சுமிக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததும், அவரே கர்ப்பத்திற்குக் காரணம் என்பதும் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த நிங்கப்பா, மனைவி லட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவைக் கலைத்திருக்கிறார். மேலும், திப்பேஷ் நாயக்குடனான உறவைக் கைவிடுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, கருவைக் கலைத்ததற்காக நிங்கப்பாவின் மீது கடும் கோபத்தில் இருந்த லட்சுமி, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார். அதன்படி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று, திப்பேஷ் நாயக், விருந்து வைப்பதாகக் கூறி லட்சுமியுடன் நிங்கப்பாவை சன்னகிரி தாலுகா, நல்லூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர், இருவரும் நிங்கப்பாவிற்கு அதிக அளவில் மது கொடுத்தனர். அதீத போதையில் இருந்த நிங்கப்பாவை, மனைவி லட்சுமியும், திப்பேஷ் நாயக்கும் இணைந்து கல்லால் தாக்கி கொலை செய்து, பத்ரா கால்வாயில் வீசினர்.
அதன்பிறகு, லட்சுமி, தனது கணவர் பத்ரா கால்வாயில் குளிக்கும்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறி, நாடகமாடி ஊர் மக்களையும் உறவினர்களையும் நம்பவைத்தார். இதுதொடர்பாக புகாரின் பேரில் காவலர்கள் கால்வாயில் நிங்கப்பாவின் உடலைத் தேடினர். ஆனால், உடல் கிடைக்காமல் போனது.
இதைத் தொடர்ந்து, நிங்கப்பா உயிரிழந்த சில மாதங்களில், திப்பேஷ் நாயக் கேரளாவிற்கு வேலைக்குச் சென்றார். இந்த சூழலில் தான் யாரிடமும் சொல்லாமல் லட்சுமி திடீரென கேரளாவிற்கு சென்றார். அங்கு இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்த திடுக்கிடும் தகவலை சந்தோஷ் தெரிவித்தார். சந்தோஷ், லட்சுமியின் கணவர் நிங்கப்பா, திப்பேஷ் நாயக் ஆகிய மூவரும் தோட்டத்தில் ஒன்றாக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
சந்தோஷின் வாக்குமூலத்தைக் கேட்ட சன்னகிரி காவலர்கள், கேரளாவிற்கு விரைந்து சென்று லட்சுமி மற்றும் திப்பேஷ் நாயக் ஆகியோரைக் கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர், இருவரும் நிங்கப்பாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.