Advertisment

“அப்பா எனக்கு பயமா இருக்கு..” - இரவில் கதறிய மகள் - காலையில் காத்திருந்த அதிர்ச்சி!

2

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமண்ணா. இவருக்கு ஸ்வாதி என்ற பெண்ணுடன் திருமணமாகி, 12 வயது மகள் ஒருவர் உள்ளார். ராமண்ணா, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ராமண்ணாவுக்கு நைட் ஷிப்ட் என்பதால்,  2 ஆம் தேதி இரவு வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி ஸ்வாதியும், மகளும் மட்டும் தனியாக இருந்துள்ளனர். 

Advertisment

இந்த நிலையில் தான், இரவு 10.30 மணியளவில் ராமண்ணாவுக்கு போன் செய்த அவரது 12 வயது மகள், “அம்மா மருந்து சாப்பிட்ட பிறகு அசாதாரணமாகவும், அமைதியின்றியும் இருக்கிறார். எனக்கு பயமா இருக்கு..” என்று கூறியுள்ளார். தற்போது தான் பணிக்கு வந்திருப்பதால், “அதெல்லாம் ஒன்றுமில்லை, பயப்படாம இரு, நான் காலையில் வந்துவிடுகிறேன்” என்று 12 வயது மகளிடம் தைரியம் கூறியுள்ளார். 

Advertisment

இதைத் தொடர்ந்து, ராமண்ணா பணி முடிந்து மறுநாள் காலை வீட்டுக்கு வந்துள்ளார். கதவு உள்பக்கமாகத் தாப்பால் போடப்பட்டிருந்ததால், கதவைத் தட்டியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ராமண்ணா ஜன்னலின் வழியாக வீட்டுக்குள் பார்த்துள்ளார். அப்போது மனைவி ஸ்வாதி தூக்கில் தொங்கியிருப்பதைக் கண்டு அதிர்ந்துள்ளார். 

அடுத்த நொடியே, மனைவியின் காலுக்கு கீழ் தரையில் ரத்த வெள்ளத்தில் அவரது 12 வயது மகள் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து கதறித் துடித்துள்ளார். ராமண்ணாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். இதனிடையே, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வீட்டை ஆய்வு செய்தனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்வாதி மகள் என்றும் கூடப் பார்க்காமல் கத்தி மற்றும் கத்தரியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலின் மீது ஏறி நின்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக ஸ்வாதிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக மருந்துகள் உட்கொண்டுவந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய மாவட்ட எஸ்.பி. ஜி.கே. மிதுன் குமார், “இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒன்று குழந்தை கொலைக்காகவும், மற்றொன்று ஸ்வாதி தற்கொலைக்காகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.   ஸ்வாதி கத்தி மற்றும் கத்தரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை செய்திருக்கிறார். முதற்கட்டமாக மனநலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக கொலை நடந்திருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், நாங்கள் விசாரணையைத் தொடர்ந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

தனது மகளைக் கொன்று அவரது உடல் மீது ஏறி நின்று தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

police Husband and wife karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe