கர்நாடகாவில் பெல்லாரி நகரில் வால்மீகி சிலை நிறுவுவதற்காக காங்கிரஸ் கட்சி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான வால்மீகி சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சமயத்தில் வியாழக்கிழமை அன்று காங்கிரஸ் எம்எல்ஏ நாரா பரத் ரெட்டி மற்றும் பாஜக எம்எல்ஏ ஜி.ஜனார்த்தன ரெட்டி ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு இடையே வன்முறைக் கலவரம் ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கலவரத்தில் காங்கிரஸ் கட்சித் தொண்டர் ராஜசேகர் என்பவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்லாரி காவல் கண்காணிப்பாளர் பவன் நெஜ்ஜூர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவுக்கு முன்னாள் எம்.பி. எச்.எம். ரேவண்ணா தலைமை தாங்குகிறார். மேலும், முன்னாள் எம்எல்ஏ ஜெயபிரகாஷ் ஹெக்டே, எம்எல்ஏ டி ரகு மூர்த்தி, எம்.பி. குமார் நாயக், எம்எல்சி ஜக்கப்பனவர் மற்றும் எம்எல்சி பசவனகவுடா பதராலி ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் டி.கே.சிவகுமார், " வால்மீகி சிலை வைப்பதற்காக காங்கிரஸ் கட்சி விழா நிகழ்ச்சியை ஏற்பட்டு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில்  பாஜகவினர் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளனர். பாஜக வேண்டுமென்றே அமைதியின்மையை உருவாக்க முயற்சி செய்கிறது. அவர்களால் தோல்வியை சகித்துக்கொள்ள முடியவில்லை. எனவே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கப்  பார்க்கிறார்கள்.  பாஜக எம்எல்ஏ ஜனார்த்தன ரெட்டி பல்லாரிக்குள் வரும் வரை எந்த வன்முறையும் இல்லை. அவர் வந்த பிறகே வன்முறை தூண்டப்பட்டுள்ளது. அதனால் இந்த வன்முறை சம்பவத்தைப் பற்றிப் பேச அவருக்கு எந்த தகுதியும் இல்லை. எங்கள் கட்சியின்  எம்எல்ஏ பரத் ரெட்டிக்கு எங்கள் கட்சி உறுதுணையாக நிற்கும். விசாரணை மூலம் குற்றவாளிகள்  கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், விசாரணைக்குப் பிறகு உண்மைகள் வெளிவரும் , அதுவரை பொறுமையாக இருங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.

அதே சமயத்தில் ஜனார்த்தன ரெட்டி, பல்லாரியில் தன் மீது 'முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை முயற்சி' நடந்ததாகக் கூறி, தனக்கு உடனடியாக இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கக் கோரி,  கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்குத் தனித்தனியாகக் கடிதங்களையும் எழுதியுள்ளார்.

Advertisment