பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்கான தரவுகளை ஆதாரங்களோடு ராகுல் காந்தி கடந்த 7ஆம் தேதி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி பகிர்ந்த வாக்காளர் பட்டியலின் விளக்கக்காட்சியில், ஒரே வாக்காளர் பல முறை இடம்பெற்றிருப்பதையும், பல மாநிலங்களில் ஒரே வாக்காளர் இருப்பதையும், வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி இல்லாமல் இருப்பதும், ஒரே முகவரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பதும், வாக்காளர் அடையாளர் அட்டைகளில் அடையாளம் காண முடியாத அளவுக்கு மைரோசைஸ் செய்யப்பட்ட புகைப்படங்களும், முதல் முறையாக வாக்காளர்களுக்கான படிவம் 6இன் தவறாக பயன்படுத்திருப்பதையும் காண முடிந்தது. நாட்டில் முதன் முறையாக தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, வாக்காளர் பட்டியல் முறைகேட்டை எதிர்த்தும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்தும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 300 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ராகுல் காந்தி இன்று (11-08-25) காலை 11:30 மணியளவில் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்றார். ‘வாக்கு திருட்டு’ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாகச் சென்ற போது அனுமதியின்றி பேரணி நடத்துவதாகக் கூறி டெல்லி போலீசார் அவர்களை வேலி தடுப்பு கொண்டு தடுத்து நிறுத்தினர். இதனால், தடுப்பு வேலி மீது ஏற முயன்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல எம்.பிக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் எம்.பிக்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பிக்களை டெல்லி காவல்துறை கைது செய்தனர். இதனால், தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் நடந்ததாக கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். கர்நாடகா கூட்டுறவு அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜண்ணா இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் முறைகேடு நடந்தது. எவை எங்கள் கண் முன்னே நடந்தது. ஆனால், வரைவு கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் ஆட்சேபனைகளை எழுப்புவதற்குப் பதிலாக கண்களை மூடிக்கொண்டு அமைதியாக அமர்ந்தனர். நாங்கள் அதைக் கண்காணிக்காதது எங்களுக்கு அவமானம். மகாதேவபுராவில் ஒரு நபர் மூன்று வெவ்வேறு இடங்களில் தங்கள் பெயரைச் சேர்த்து பல முறை வாக்களிக்க முடிந்தது. அதே நேரத்தில் 10,15 குடியிருப்பாளர்கள் மட்டுமே உள்ள சில பகுதிகளில் சரியான முகவரிகள் அல்லது தந்தையின் பெயர்கள் இல்லாமல் 60 பெயர்கள் சேர்க்கப்பட்டனர். தேர்தல் ஆணையம் செய்யக் கூடாததை செய்தது. ஆனால், காங்கிரஸ் சரியான நேரத்தில் ஆட்சேபனை தெரிவிக்கத் தவறிவிட்டது. எங்களுக்கு ஒரு பொறுப்பு இருந்தது. ஆனால், நாங்கள் அப்போது அமைதியாக இருந்தோம், இப்போது பேசுகிறோம். கட்சி இப்போது விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ராகுல் காந்தி ஒரு பக்கம் பா.ஜ.கவையும், பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி தேர்தல் ஆணையத்தையும் கடுமையாக எதிர்த்து வரும் சூழ்நிலையில், காங்கிரஸ் அமைச்சரே காங்கிரஸ் ஆட்சியிலும் முறைகேடு நடந்துள்ளது என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜ.கவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ராஜண்ணாவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ராஜண்ணாவை உடனடியாக அமைச்சரவையில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கட்சித் தலைவர்களே கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கர்நாடகா மைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.