karnataka high court halts on congress government ban rss
கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 12ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சமீராபுரா அரசு பள்ளி, வித்யவர்தகா பள்ளிக்குப் பின்னால் உள்ள மைதானம் மற்றும் பிற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்தினர். பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல மாணவர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
இந்த சூழ்நிலையில் அரசுப் பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் கோயில்களில் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவின் மகனும், கிராமப்புற வளர்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே, சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அமைச்சர் பிரியங்க் கார்கே எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தகவல் தெரிவித்தார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தனியார் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், அரசு பள்ளி, கல்லூரி போன்ற அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டாய அனுமதி பெற வேண்டும் கர்நாடகா அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவில், விதிமுறை மீறல்களுகு கடுமையான தண்டனை வழங்கவும் தெரிவிக்கப்பட்டிருந்து. கர்நாடகா அரசின் இந்த உத்தரவுக்கு பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டவைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதனை தொடர்ந்து கர்நாடகா அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், அரசின் இந்த உத்தரவால் தனியார் அமைப்பு மற்றும் நிறுவனங்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று (28-10-25) நீதிபதி நாகபிரசன்னா அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது, “அரசாங்க உத்தரவு குடிமக்களுக்கு வழங்கப்பட்ட உரிமையைப் பறிக்கிறது என்பது முதல் பார்வையிலே தெரிகிறது. அந்த வகையில், அத்தகைய அரசாங்க உத்தரவை செயல்படுத்த அனுமதிக்க முடியாது. இருப்பினும், அரசு வழக்கறிஞர் தனது ஆட்சேபனை அறிக்கையை தாக்கல் செய்ய பாதுகாக்க நேரம் கோருகிறார். அரசாங்க உத்தரவு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 13 (2) ஐ மீறுவதாகக் கருதி, அரசாங்க உத்தரவு மற்றும் அதன் விளைவாக பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளும் அடுத்த தேதி வரை நிறுத்தி வைக்கப்படும்” என்று கர்நாடகா அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து இந்த வழக்கை நவம்பர் 17ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
அரசு வளாகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால், முதல்வர் சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.
Follow Us