நடப்பாண்டில் நடந்த ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைபற்றியது. 17 வருடத்திற்கு பிறகு முதல் முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றதால், ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணி கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனை காண லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 45க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

35 ஆயிரம் பேர் அமரக்கூடிய மைதானத்தில், 2 முதல் 3 லட்சம் பேர் வந்திருந்ததால் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது என்றும், கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்றும் காவல்துறை அறிவுறுத்தலை மீறி வெற்றி பெற்ற அடுத்த நாளே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாக ஆர்சிபி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ), டி.என்.ஏ நெட்வொர்க்ஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது கப்பன் பார்க் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகா கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை கர்நாடகா அரசு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘ஜூன் 3ஆம் தேதி அணிவகுப்பு நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆர்.சி.பி அணி காவல்துறையிடம் தெரிவித்தது, ஆனால் அனுமதிக்கு முறையாக விண்ணப்பிக்கவில்லை. கூட்ட மதிப்பீடுகள், போக்குவரத்து, அவசரகால நடவடிக்கை தொடர்பான எந்த விவரங்களும் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை. இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி வென்றதா தோற்றதா என்பது குறித்தும், எதிர்பார்க்கப்படும் கூட்டம், செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

இருப்பினும், ஜூன் 4ஆம் தேதி காலை 7 மணிக்கு நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஆர்.சி.பி தனது சமூக ஊடக பக்கத்தில் பகிரங்கமாக அறிவித்தது. விதான் சவுதாவில் தொடங்கி சின்னசாமி மைதானம் வரை நடைபெறும் அணிவகுப்புக்கு இலவச நுழைவு என அறிவித்திருந்தது. இந்த பதிவும் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தன. கிரிக்கெட் வீரர் விராட் கோலி காலை 8:55 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகி, வெற்றியை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாட விரும்புவதாக தெரிவித்தார். ஊக்கப்படுத்தியது. பிற்பகல் 3:14 மணிக்கு இலவச-பாஸ் முறையை அறிவித்தது. ஆனால் அதற்குள், ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே திறந்த அணுகலைப் பெற்று வந்துவிட்டனர். மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே இடம்பெற முடியும். ஆனால் வரையறுக்கப்பட்ட இடத்தை விட சுமார் 3 லட்சம் பேர் கூடினர். ஆர்சிபி அணி அமைப்பாளர்கள் தங்கள் பதிவில் நுழைவு இலவசம் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, அரங்கத்தின் நுழைவு வாயில்களில் இவ்வளவு கூட்டம் குவிந்தது.  

Advertisment

கூட்டம் அதிகரித்ததால், நுழைவு அமைப்பு குறித்த குழப்பம் பீதியை ஏற்படுத்தியது. மைதானத்தின் வாயில்கள் சரியான நேரத்தில் திறக்கப்படவில்லை. வாயிலில் நிர்வாகத்தினர் இல்லாததால் கூட்டத்தினரால் பல வாயில்கள் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. மோசமான திட்டமிடலாலும், முறையான ஒருங்கிணைப்பு இல்லாததாலும், ஆர்சிபி மற்றும் அமைப்பாளர்கள் உரிய நடைமுறையை பின்பற்ற தவறியதாலும் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.