கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையாக முதல்வர் பதவியேற்று சராசரியாக 2.5 ஆண்டுகள் ஆன நிலையில், முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்று தகவல் வெளியாகி வருகிறது. கடந்த 2023 மே மாதத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்ற சித்தராமையாவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்தோடு 2.5 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது.

Advertisment

இந்த சூழ்நிலையில், தற்போதைய அமைச்சர்களில் 50 சதவீதத்தை நீக்க புதிய முகங்களைக் கொண்டு வர சித்தராமையா முடிவு செய்திருப்பதாக சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. நவம்பரில் சுமார் 15 புதிய அமைச்சர்களைச் சேர்த்தால் முதலமைச்சரை உடனடியாக மாற்ற கட்சி மேலிடத்திற்கு கடினமாக்கூடும் என்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், வரும் 13ஆம் தேதி அனைத்து அமைச்சர்களுக்கும் சித்தராமையா விருந்து அளிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகின. கர்நாடகாவில் தலைமை மாற்றம் குறித்த ஊகங்கள் கட்சிக்குள் பரவி வருவதால் குழப்பம் நீடிக்கிறது. இந்த ஊகங்கள் இருந்த போதிலும், கர்நாடகாவில் தலைமை மாற்றம் இருக்காது என்று காங்கிரஸ் உறுதியாகக் கூறி வருகிறது. தலைமை தொடர்பான முடிவுகளை கட்சி மேலிடமே எடுக்கும் என்று கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், பதவி உயர்வுக்காக அவசரப்படவில்லை என்று அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வளர்ச்சி குறித்து பொதுமக்களின் குறைகளைக் கேட்பதற்கும் கருத்துக்களைப் பெறுவதற்கும் காலை நடைபயிற்சி செய்பவர்களுடன் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உரையாடி வருகிறார். அந்த வகையில், லால்பாக்கில் இன்று காலை ஒரு முதியவரிடம் கருத்து கேட்டார். அப்போது அந்த நபர் சிவகுமாரிடம், ‘ஐயா, நீங்கள் 40 ஆண்டுகள் கட்சியின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். நீங்கள் முதலமைச்சராக வருவது நியாயமானதுதான். நேரம் நெருங்கிவிட்டதா?’ என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. மேலும், இந்த உரையாடல் குறித்து செய்தி வெளியிட்ட சில ஊடகங்கள், சிவகுமார் முதலமைச்சராகும் நேரம் நெருங்கிவிட்டது என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தி டி.கே.சிவகுமாரை கோபப்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, “லால் பாக்கில் நடந்த பொது உரையாடலின் போது, ​​நான் முதலமைச்சராக வேண்டும் என்று சிலர் கூறினர். ஆனால் ஊடகங்கள் அதைத் திரித்து, அதை எனது அறிக்கையாக வெளியிட்டு வருகின்றன. செய்தியைத் திரித்து சர்ச்சையை உருவாக்க வேண்டாம். நான் ஒருபோதும் அத்தகைய அறிக்கையை வெளியிடவில்லை. அது ஒரு குடிமகனால் வெளிப்படுத்தப்பட்ட விருப்பம். முதலமைச்சராகும் அவசரத்தில் தான் இல்லை. ஊடகங்கள் இந்தப் பிரச்சினையை பரபரப்பாக்குவதை நிறுத்த வேண்டும். சில ஊடகங்கள் எனது அறிக்கையைத் திரித்து சர்ச்சையை உருவாக்க முயற்சிக்கின்றன. நான் முதலமைச்சராக வேண்டிய நேரம் இது என்று நான் ஒருபோதும் கூறியதில்லை. எனது அறிக்கையை யாராவது திரித்து ஒளிபரப்பினால் அவதூறு வழக்குத் தொடுப்பேன்.

Advertisment

முதல்வர் நாற்காலியை அமர வேண்டும் என்ற அவசரம் எனக்கு இல்லை. நான் அரசியலுக்கு வருவது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தவிர அரசியல் செய்ய அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்காக நான் ஒவ்வொரு பகலிலும் பாடுபடுகிறேன். நீங்கள் இப்படி செய்திகளைத் திரித்தால், நான் உங்களுடன் ஒத்துழைக்க மாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு உங்களை அழைக்க மாட்டேன்” கூறினார்.