கர்நாடகாவில் கடந்த 2015இல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பலதரப்பட்ட மக்களின் சமூகம், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விவரங்கள் திரட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அப்போது இருந்த சித்தராமையா தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டது.
ஆனால் அந்த அரசாணைக்கு கர்நாடகாவில் இரு பெரும் சமூகங்களான ஒக்கலிகா, லிங்காயத்து ஆகிய சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், கணக்கெடுப்பு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படாமல் இருந்தது. அதனை தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், சித்தராமையாவின் ஆட்சி முடியும் தருவாயில் இருந்ததால் அது தொடர்பான அறிக்கையையும் வெளியிடப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் தலைமையில் சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி அக்டோபர் 7ஆம் தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அந்த பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு இப்பணி முழுமையாக நடத்த முடியாததால் அக்டோபர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், கர்நாடகாவில் நடைபெற்று வந்த சாதிவாரி கணக்கெடுப்பு நேற்றுடன் (31-10-25) முடிவடைந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 6 கோடியே 85 லட்சம் பேர் கொண்ட கர்நாடகாவில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் 89% பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், 4.2 லட்சம் பேர் கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்துவிட்டதாகவும், 34 லட்சம் வீடுகள் பூட்டப்பட்டிருந்ததால் அங்கு வசிக்கும் குடும்பங்களில் விவரங்கள் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட இந்த தரவுகளை கொண்டு சமூக நீதி முடிவுகள் சார்ந்த முடிவுகள், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்க சித்தராமையா தலைமையிலான கர்நாடகா அரசு முடிவெடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/01/castecensus-2025-11-01-18-14-06.jpg)