வெறுப்பு பேச்சு, வெறுப்பு குற்றங்களை தடுக்கும் வகையில் கர்நாடகா மாநில சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதம், சாதி, மொழி, நிறம், பாலினம் என எந்த அடிப்படையிலும் வெறுப்பு பேச்சு, வெறுப்பு குற்றங்களை தடுக்கும் வகையில் மசோதா ஒன்றை கடந்த 10ஆம் தேதி அம்மாநில அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவை சமூக நலத்துறை அமைச்சர் ஹெச்.சி மகாதேவப்பா மாநில சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார்.

Advertisment

இந்த மசோதாவில் மதம், சாதி, மொழி, சமூகம், பிறந்த இடம், பாலினம், நிறம், வசிப்பிடம், இயலாமை என எந்த அடிப்படையில் ஒருவரை இழிவுப்படுத்தும் நோக்கில் எழுத்து வடிவிலோ, சைகை வடிவிலோ எந்த வடிவிலும் வெறுப்பு பேச்சோ அல்லது குற்றங்களை செய்தாலோ அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக மாநில சட்டப்பேரவையில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்தது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராமையா அசோக், “இந்தச் சட்டத்தின் மூலம், அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள மக்களின் பேச்சுரிமையை மாநில அரசு பறிக்கிறது மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஊடகங்களையும் சிறையில் அடைக்க உதவுகிறது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க ஏற்கனவே உள்ள சட்டங்கள் போதுமான அளவு வலுவாக உள்ளன. மசோதாவை ஆய்வுக்காக ஒரு ஹவுஸ் கமிட்டிக்கு அனுப்ப வேண்டும்” என்று கூறினார். இந்த மசோதாவுக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் வரவேற்றது.

Advertisment

கடந்த சில நாட்களாக இந்த மசோதா குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (18-12-25) மசோதா நிறைவேற்றப்பட்டது. வெறுப்புணர்வை தடுக்கும் வகையில் இந்த மசோதாவை நிறைவேற்றி, நாட்டிலேயே முதல் மாநிலமாக கர்நாடகா நடவடிக்கை எடுத்துள்ளது.