மதுரை செல்லூர் சேர்ந்த பழனிக்குமார் (42) ஒப்பந்ததாரர். இவர் 2022-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்பிலான நவீன எரிவாயு தகனமேடை அமைக்க ஒப்பந்தம் பெற்றிருந்தார்.
பணிகள் முழுமையடைந்த நிலையில் முதல் கட்டமாக ரூ.1 கோடியே 14 லட்சம் பில் தொகை வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.24 லட்சத்து சில ஆயிரங்களுக்கான இறுதிப் பில்லை விடுவிப்பதற்காக காரியாபட்டி பேரூராட்சியில் பணியாற்றும் ஜூனியர் இன்ஜினியர் வி. கணேசன் (54) ரூ.3.50 லட்சம் லஞ்சம் கேட்டார். இதில் முதல் தவணையாக ரூ.50,000 முன்பணம் தர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகத் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனிக்குமார், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தியபடி ரசாயனம் தடவப்பட்ட ரூ.50,000 ரொக்கத்தை பழனிக்குமார், காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இன்ஜினியர் கணேசனிடம் வழங்கினார். அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன், ஆய்வாளர்கள் பூமிநாதன் மற்றும் ஜேஸ் மும்தாஜ் தலைமையிலான குழுவினர் இன்ஜினியர் கணேசனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். லஞ்சப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக பேரூராட்சி அலுவலகத்தில் விசாரணை நடத்திய போலீசார், காரியாபட்டி பள்ளத்துப்பட்டி பகுதியில் உள்ள கணேசன் வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கு கணக்கில் வராத ரூ.9 லட்சத்து 23 ஆயிரம் ரொக்கப் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
பின்னர் இன்ஜினியர் கணேசனை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us