திருநெல்வேலி மாவட்டம், பேட்டைப் பகுதியில் உள்ள நரசிங்கநல்லூரைச் சேர்ந்தவர், கராத்தேயில் டிப்ளமோ படித்த இளைஞர் அப்துல் வகாப். இவர், சுத்தமல்லி, பேட்டை, கோடீஸ்வரன் நகர், டவுன் குற்றால ரோடு, பாளை கே.டி.சி. நகர் ஆகிய பகுதிகளில் கராத்தே வகுப்புகள் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். இவரது மையங்களில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10 மற்றும் +2 வகுப்பு மாணவ மாணவிகள் 15-க்கும் மேற்பட்டோர் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர்.
சுத்தமல்லி பகுதியில் உள்ள இவரது கராத்தே மையத்தில், இஸ்தீப் நகரைச் சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளியின் இரு குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் தாய், தினமும் காலையில் குழந்தைகளைப் பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு, பயிற்சி முடிந்த பிறகு வீட்டிற்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவரை நோட்டமிட்ட கராத்தே மாஸ்டர் அப்துல் வகாப், அந்தப் பெண்ணிடம் கனிவாகப் பேசி, அவரது செல்போன் எண்ணைப் பெற்றிருக்கிறார். பின்னர், ஆரம்பத்தில் சகஜமாகவும் கனிவாகவும் பேசி, தனது வலையை வீசியிருக்கிறார். இப்படி தினந்தோறும் பேசி வந்த கராத்தே மாஸ்டர், ஒருநாள் திடீரென அவரது வீட்டிற்குச் சென்று அதிர்ச்சியும் கொடுத்திருக்கிறார்.
பின்னர், இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் நெருக்கமாகிய நிலையில், இந்த விவகாரம் குறித்து பெண்ணின் கணவருக்குத் தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மனைவியைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் கராத்தே மாஸ்டருடன் பேசுவதை திடீரென நிறுத்தியிருக்கிறார். இதையடுத்து, சம்பவத்தன்று அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்ற அவர், “நான் போன் செய்தபோது ஏன் எடுக்கவில்லை” என்று கோபமாகவும் ஆபாசமாகவும் பேசியிருக்கிறார். மேலும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதனால் பயந்து போன அந்தப் பெண் கத்தி கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் பதறி ஓடி வந்துள்ளனர். அதைப் பார்த்த அப்துல் வகாப் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இது குறித்து பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், சுத்தமல்லி காவல் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீஸார், அப்துல் வகாபை அன்று இரவே கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்தப் பெண்ணிற்கும் கராத்தே மாஸ்டருக்கும் இடையேயான பழக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருப்பது தெரியவந்திருக்கிறது. ஆரம்பத்தில், குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கும்போது, அவர்களின் உடல் பாகங்களைத் தொட்டு வளைப்பது, கராத்தே நகர்வுகளை அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அவர், பின்னாளில் பயிற்சி மையத்திற்கு குழந்தைகளைக் கொண்டுவந்து விடும் தாய்மார்களைக் குறிவைத்திருக்கிறார்.
இதில் அழகான பெண்களை நோட்டமிட்டு, அவர்களிடம் சகஜமாகப் பேசி, செல்போன் எண்களைப் பெற்று விடுவாராம். பின்னர், தன் வழக்கமான கவர்ச்சி வார்த்தைகளைப் பேசி, அவர்களைக் காதல் வலையில் வீழ்த்தி, வீடு வரை சென்று பாலியல் சீண்டலில் ஈடுபடுவாராம். சிலர், தன் பிள்ளையின் கராத்தே மாஸ்டர் என்பதால், இவரது சீண்டல்களைச் சகித்துக்கொண்டாலும், எல்லை மீறும்போது எதிர்க்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி சிலரைத் தனது பாலியல் இச்சைக்கு உட்படுத்தியிருக்கிறார். இதில் பாதிக்கப்பட்ட சில பெண்கள், சமூகத்திற்குப் பயந்து வெளியே சொல்வதில்லை. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, கராத்தே மாஸ்டர் தனது பாலியல் தொல்லைகளைத் தொடர்ந்து செய்து வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
விசாரணைக்குப் பின்னர், கராத்தே மாஸ்டர் அப்துல் வகாபைக் கைது செய்த போலீஸார், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்.பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாகப் புகார் தெரிவித்தால், அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று சுத்தமல்லி போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தால், நெல்லை பேட்டைப் பகுதியே கலக்கமடைந்து போயிருக்கிறது.