'Karaikal incident not easily forgotten' - court's sensational verdict Photograph: (karaikkal)
கடந்த 2022 ஆம் ஆண்டு காரைக்காலில் தன் மகளை விட பக்கத்து வீட்டு சிறுவன் அதிக மதிப்பெண் எடுத்ததால் சிறுவனை விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணுக்கு தற்பொழுது நீதிமன்றம் தண்டனை அறிவித்துள்ளது.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் சகாயராணி விக்டோரியா. இவருடைய மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அவர்கள் வீட்டிற்கு அருகே உள்ள சிறுவனும் அதே பள்ளியில் அந்த மாணவி உடன் ஒரே வகுப்பில் படித்து வந்தார். மாணவியை விட மாணவன் மிகவும் திறம்பட படித்து வந்துள்ளார். தேர்வில் அந்த மாணவனே அதிக மதிப்பெண் எடுத்து வந்துள்ளார். இது மாணவியின் தாயாரான ராணிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
இதனால் தன்னுடைய மகள் சிறுவனை விட குறைவான மதிப்பெண் எடுப்பதை விரும்பாத அவர், சிறுவனை அழைத்து விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். நண்பரின் தாயார் தானே என்று அவரும் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறியாமல் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த சிறுவன் மயக்கமடையவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சையில் இருந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மாணவியின் தாயாரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் அந்த நேரத்தில் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் பள்ளி சிறுவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சகாயராணி விக்டோரியாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து தற்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.