கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தோவாளை முத்துநகர் பகுதியில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த டெம்போவானது தேசிய நெடுஞ்சாலையில் இருந்து முத்துநகர் பகுதிக்குள் செல்வதற்காகத் திரும்பியுள்ளது. அச்சமயத்தில் அங்கு சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. 

Advertisment

இந்த பேருந்து எதிர்பாராத விதமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டெம்போ மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டெம்போ சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதே சமயம் தனியார் பேருந்தின் முன்பகுதியும் முழுவதுமாக சேதமடைந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதற்கிடையே இந்த விபத்து குறித்து உடனடியாக ஆரலவாய்மொழி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

Advertisment

மற்றொருபுறம், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக தென்காசி மாவட்டத்தில் இடைகால் என்ற இடத்தில் நேற்று (24.11.2025) தனியார் பேருந்துகள் ஒன்றுக்கு ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது. இதில் 8 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.