கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி இழை பாலமானது அமைக்கப்பட்டது. இந்த பாலத்தைத் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இந்த பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைத்து கண்ணாடி இழை தரைதள பாலம் கட்டப்பட்டு, சுமார் 17.50 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்துள்ளார்கள். 

Advertisment

இக்கண்ணாடி பாலத்தினை தகுதியான வல்லுநர்களைக் கொண்டு, சிறப்பாக பாரமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 16.08.2025 அன்று பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் மூலம் பாலத்தின் மேல்பகுதியில் பெயிண்ட் அடிக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக பணியாளர் கையில் இருந்த ஒரு சிறிய சுத்தியல் 7 மீட்டர் உயரத்திலிருந்து 6வது கண்ணாடியின் மேல் விழுந்து முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. இதன் பிறகு கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்தில் கண்ணாடி புதிதாகச் செய்வதற்கு ஒப்பந்ததாரர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்கண்ணாடி மொத்தம் 4 அடுக்குகளாக உள்ளதால், உரியப் பாதுகாப்பு நடைமுறையில் தயாரிக்கப்பட்டு, கடந்த 01.09.2025 அன்று கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது. அதனைத்தொடர்ந்து கண்ணாடி நிறுவனத்தின் முன்னிலையில் 04.09.2025 அன்று கண்ணாடி சோதிக்கப்பட்டது. இக்கண்ணாடியைப் பாலத்தில் பொருத்துவதற்கு மும்முனை (3 Phase) மின் இணைப்பை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் இருந்ததால், தற்போது ஜெனரெட்டர் மூலம், கண்ணாடி பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இப்பணியானது இரு தினங்களில் நிறைவுபெறும். மேலும் 16.08.2025 முதல் இன்று வரை ஒரு இலட்சத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் கண்ணாடி பாலத்தின் மீது நடந்து சென்றுள்ளனர். இதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. கண்ணாடி பாலம் மிகவும் உறுதித்தன்மையுடனும் இருக்கின்றது. எனவே சுற்றுலாப் பயணிகள் கண்ணாடி பாலத்தினை தொடர்ந்து பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி (30.12.2024) திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.