மகாத்மா காந்தி பெயரில் உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்குப் பதிலாக ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. இந்த திட்டத்தில், 90% நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் எனவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதோடு 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றியமைத்து இந்தி மொழியில் பெயர் வைக்கப்படுவதாக தமிழக முதல்வர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இதனிடையே , நாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 16ஆம் தேதி  கூடிய போது மக்களவையில் விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி என்ற புதிய திட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே கடும் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

Advertisment

அதன்படி திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி இந்த மசோதா தொடர்பாக நேற்று (18-12-25) மக்களவையில் பேசினார். அதில் அவர், “உங்களுக்கு வஉசி என்றாலே யார் என்று தெரியாது. இந்த நாட்டின் விடுதலைக்காக போராடி செக்கிழுத்த செம்மல் யார் என்று உங்களுக்கு தெரியாது. தேர்தல் வந்தால் உங்களுக்கு தமிழ்நாட்டின் நியாபகம் வரும். தேர்தல் வந்தால் வருவீர்கள், தேர்தல் நேரத்தில் வந்து நான் தமிழனாக பிறக்கவில்லையே என்று வருத்தப்படுகிறேன் என்று சொல்வீர்கள். ஆனால், பீகாரில் தேர்தல் நடக்கும் போது பீகாருக்குச் சென்று தமிழர்கள் பீகாரிகளுக்கு எதிரானவர்கள் என்று சொல்வீர்கள். ஒடிசாவில் தேர்தல் நடந்தால் தமிழர்கள் இங்கே வந்து அதிகாரத்தை பறிக்க நினைக்கிறார்கள் என்று தமிழர்களுக்கு எதிராகப் பேசுவீர்கள். இப்படி எங்களுடைய மக்களைப் பற்றி மாநிலங்களில் இருக்கக்கூடிய மக்களைப் பற்றி எந்த கவலையும் அக்கறையும் இல்லாத நீங்கள் எப்படி தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கக்கூடிய மக்களின் தேவைகளை புரிந்து கொண்டு ஒதுக்கீடு செய்வீர்கள்? 

இது வளர்ச்சிப் பாரதம் இல்லை, விபரீதப் பாரதம். நீங்கள் கொண்டு வரும் அனைத்து மசோதாக்களிலும் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை தென்னிந்திய மக்கள் மீது திணிக்க முயற்சி செய்கிறீர்கள். ஏன் ஒரு மசோதாவில் கூட ஏதாவது தென்னிந்திய மொழிகளில் பெயர் வைக்கவில்லை? இது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம் வஞ்சிக்கப்படும் பாரதம். தொழிலாளர் விரோத அரசு, விவசாய தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்கூடிய இந்த மசோதாவை நான் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் முற்றிலுமாக மறுதளிக்கிறேன், எதிர்க்கிறேன். இப்பொழுது இந்த மசோதா, அதிகாரத்தை கொண்டு போய் ஒன்றிய அரசாங்கத்தின் கையில் குவிக்கக்கூடிய ஒரு மசோதாவாக மாற்றப்பட்டிருக்கிறது” என்று பேசினார். 

Advertisment