நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில்,  நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நேற்று (28-07-25) நடைபெற்றது. இந்த விவாதத்தில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் உள்ளிடோர் பேசினர். இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக் இரண்டாம் நாள் விவாதம் இன்று (29-07-25) நடைபெற்றது. இந்த விவாதத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பேசினார்.

அப்போது அவர், “இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், எங்களை பிரிக்காதீர்கள். விஸ்வகுரு என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல் நடக்கும்போதெல்லாம் என்ன செய்கிறார்? பஹல்காம் தாக்குதலுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுள்ளாரா? பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு ஒன்றிய அரசு என்ன உதவி செய்கிறது? ஒவ்வொரு தேர்தலின்போதும் தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தை கண்டறிந்துவிடுகிறது பாஜக. ஆனால் கீழடி நாகரிகத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்காவிட்டாலும் அதில் இருந்து விஸ்வகுரு என்ன கற்றுக்கொண்டார்? சோஃபியா குரேஷியை அவமதித்த அமைச்சர் மீது பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்தார்? அரசியலுக்காக ஏன் நாட்டை பிரித்தாள பார்க்கிறீர்கள்? மதரீதியாக நாட்டில் பிரிவினையை உருவாக்குவதுடன், வெறுப்புணர்வையும் பரப்புவது ஏன்? உங்களை நான் எந்த விதத்திலும் ஏற்றுகொள்ள தயாராக இல்லை. உங்களுடைய கொள்கைகளாக இருக்கட்டும், இந்த நாட்டில் நீங்கள் விதைக்கக்கூடிய விஷவிதைகளாக இருக்கட்டும் அவை வேறுருக்க வேண்டும் என்பதில் எனக்கு இருவேறு கருத்துக்கள் கிடையாது. ஆனால், இந்த நாடு என்று வரும்போது இந்த நாட்டினுடைய இறையாண்மையை நான் நம்புகிறேன். இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது நான் தான் என இன்னொரு நாட்டின் அதிபர் சுமார் 25 முறை சொல்கிறார். நான் அவரை நம்பவில்லை. நான் உங்களை நம்ப விரும்புகிறேன். ஆனால் உங்களை நம்புவதற்கு என்ன செய்திருக்கிறீர்கள்?. நான் நமது அரசை நம்ப விரும்புகிறேன். ஆனால், டிரம்ப் 25 முறை சொல்லிருக்கிறார். நீங்கள் அவருக்கு பதில் கொடுத்திருக்கிறீர்கள்? இந்த விஷயத்தில் ஏன் நீங்கள் மௌனத்தை மட்டும் கடைபிடிக்கிறீர்கள்?. இது தான் உங்களது வெளியுறவுக் கொள்கையா?

ஒரு பிரதமர் உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார். பாராளுமன்றம் நடந்தபோதும் கூட அவர் இங்கு இல்லை. அதற்கு தான் நமக்கு வெளியுறவு அமைச்சர் பதவி இருக்கிறது. அவர் நன்றாகப் பேசுகிறார். ஆனால், ராஜதந்திரத்தைப் பொறுத்தவரை நாம் என்ன சாதித்திருக்கிறோம்? பாகிஸ்தானுக்கு கூட இரண்டு நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. ஆனால் இந்த மண்ணில் பாகிஸ்தான் செய்ததற்கு யாராவது வெளிப்படையாக வந்து கண்டனம் செய்திருக்கிறார்களா? இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கையா?. உங்களுக்கு நண்பர்கள் இல்லையா?. நமக்கு ஏன் நட்பு அண்டை நாடுகள் இல்லை, நமக்கு நியாயமான நண்பர்கள் இல்லை. நமக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க யாரும் இல்லை. மேலும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு நாட்டை யாரும் கண்டிக்கவில்லை. உங்கள் ராஜதந்திரத்தில் நீங்கள் தோல்வியடைந்திருக்கவில்லையா? தமிழ்நாட்டிலிருந்தும் உதாரணங்களைக் கொண்டு வாருங்கள். இன்று இலங்கையுடன் உங்களுக்கு சிறந்த உறவு இருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் நண்பர்களில் ஒருவருக்கு நீங்கள் ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை கூட செய்து கொடுத்தீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதைச் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன், ஆனால் நீங்கள் அதைச் சாதித்துவிட்டீர்கள். ஆனால் இன்னும் மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கைது செய்யப்படுகிறார்கள். உங்கள் ராஜதந்திரத்தில் இது தோல்வி இல்லையா?. நீங்கள் தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள். அனைத்து உங்களது சாதனையா?. நாம் உண்மையில் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோமா? யாரும் போரை விரும்பவில்லை. போர் என்பது மனிதர்களுக்கும், மனித இனத்திற்கும் எதிரான ஒன்று. 

Advertisment

எங்களுக்கு போர் வேண்டாம். ஆனால் நாம் அதற்கு ஆயுத்தமில்லாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் சொந்த அதிகாரிகள், உங்கள் சொந்த பாதுகாப்பு அதிகாரிகள் நாம் மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். பட்ஜெட்டில் 3% பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்று நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் நாம் எங்கே இருக்கிறோம்? 2% கூட இல்லை. இந்த உலகம் அவ்வளவு அமைதியான இடம் அல்ல, நாம் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியமில்லை, நம் மக்களை நாம் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நீங்கள் தயாராக இல்லை. இன்று போர் ட்ரோன் தாக்குதல்களாக மாறி வருகிறது. நீங்கள் தயாரா? அவை ட்ரோன்கள். நீங்கள் தயாரா? நீங்கள் மேம்படுத்தியுள்ளீர்களா? நமது போர் பாகிஸ்தானுக்கு எதிரானது அல்ல. நமது போர் அதை விட அதிகமாக இருந்தது, நான் நம்புகிறேன், நீங்கள் அதை உணர்ந்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு பெரிய நாடு மறைமுகப் போரை நடத்தி அவர்களுக்கு ஆதரவளித்தது. நாம் அவர்களை எதிர்கொள்ளத் தயாரா? நாம் மேம்படுத்தி, புரிந்துகொண்டு, அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டாமா?

விஸ்வ குரு நம்மைத் தோல்வியடையச் செய்துவிட்டார் என்று கூறி என் உரையை முடிக்க விரும்புகிறேன். விஸ்வ குரு எந்தப் பாடங்களையும் கற்றுக்கொள்ளவில்லை. விஸ்வ குரு எந்தப் பாடங்களையும் கற்பிக்கவில்லை. இந்த அரசாங்கத்தை நீட்டிப்பு அரசாங்கம் என்று மட்டுமே நான் அழைக்க முடியும். ஏனென்றால் அனைத்து அதிகாரிகளும் நீட்டிப்பில் உள்ளனர். நீங்கள் உங்கள் சொந்த அதிகாரிகளை நம்பவில்லை?. நான் பெரியவன், நான்தான் இந்த உலகத்திலேயே பெரிய தலைவன், எனக்குத் தெரியும் என்று சொல்லிக் கொண்டே இருப்பதில் அர்த்தமில்லை. சோழன் கங்கையை கொண்டான், கங்கையை வென்றான், தமிழன் ஒருநாள் கங்கையை வெல்வான் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல, தேசத்தை எந்த வகையிலும் தமிழ்நாடு விட்டுக் கொடுத்ததில்லை” எனப் பேசினார்.