தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச்சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்து, கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைக் கனிமொழி எம்.பி. சந்தித்து அவர்களின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். 

Advertisment

இது தொடர்பாகக் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “நேற்று நான் சொன்னது போல முதலமைச்சராக இருக்கட்டும் பிரதமராக இருக்கட்டும் ஒரு கட்சி நிகழ்ச்சி என்று வரும்போது கட்டுப்பாடு இல்லாமல் இருக்காது. சமீபத்திலே இதே கரூரில் முப்பெரும் விழாவை திமுக மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி நடத்தினார். அதற்குக் கட்டுப்பாடு போடாமலா அனுமதி கொடுப்பார்கள். ஆளுங்கட்சியாக இருக்கக் கூடியவர்களுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கும். அதனால் அரசியல் கூட்டத்தை நடத்தும் போது நிச்சயமாகக் கட்டுப்பாடுகள் என்பது யாரையும் அச்சுறுத்த வேண்டும் யாருக்கும் இடையூறு செய்ய வேண்டும் என்பது அல்ல. கட்டுப்பாடு என்பது , அவர்களுடைய பாதுகாப்பு, வரக்கூடிய அரசியல் தலைவர்களுடைய பாதுகாப்பு மட்டுமில்லாமல் அங்கே வரக்கூடிய மக்களுக்கும் அது தான் பாதுகாப்பு.

Advertisment

சில நேரங்களில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும் பொழுது அரசியல் தலைவர்களிடம் அங்கு இருக்கக்கூடிய அதிகாரிகள் முன்னாடியே இந்த இடத்திலே பேசலாம் அப்படியென்று சொல்லும் பொழுது பொதுவாகவே அரசியல் தலைவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் மக்களுடைய பாதுகாப்பு தான் முக்கியமானது. எனவே அதனைக் கருத்திலே எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அத்தனை காவல்துறை அதிகாரிகளும் இருந்திருக்கிறார்கள். ஐஜி மானிட்டர் பண்ணியிருக்கிறார். 20 பேருக்கு ஒரு காவல்துறை அதிகாரி என்று கணக்கிலே அங்கே பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.