தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் எட்டயபுரத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசுகையில், “என்னுடைய பொறுப்பில் இருக்கக்கூடிய 22 தொகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் விளாத்திகுளம் தொகுதி முதலிடத்தில் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தூத்துக்குடி தொகுதி முதலிடத்தில் இருந்தது. இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தில் வந்துவிடலாம் என மாவட்ட கழக செயலாளர் கீதா ஜீவனிடம் பேசிய போது நான் சொன்னேன். ஆனால் இன்றைக்கு அவர்களை கூட முந்தக்கூடிய அளவுக்கு விளாத்திகுளம் தொகுதி உள்ளது. ஆகவே என்னுடைய வாழ்த்துக்களை இங்கு இருக்கக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், ஸ்ரீதர் ஆகியோருக்கு குறிப்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓரணியில் தமிழ்நாடு முகாமில் வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். எனவே 30 சதவீதம் தான் நமக்கு குறைந்தபட்ச டார்கெட் அப்படின்னு 30 சதவீதம் வந்த உடனே வேலை முடிந்துவிட்டது என நினைக்க வேண்டாம். எவ்வளவு முடிகிறதோ அந்த அளவுக்கு செய்யுங்கள். ஆனால் 100க்கு மேலே போனால் கூப்பிட்டு அடிப்பாங்க. அதனால் கரெக்டா எவ்வளவு பேரை உறுப்பினராக சேர்க்க முடியுமோ அவ்வளவு பேரை நீங்கள் சேர்க்கலாம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் மறதி அதிகம். செய்யக்கூடிய நல்ல திட்டங்களை எல்லாம் மறந்துடுவாங்க. அடுத்து என்ன பண்ணல என்பதைத்தான் நம்மை நோக்கி கேள்வி கேட்பாங்க. கேள்வி கேட்கணும். அதுக்காகத்தான் நம்மை படிக்க வச்சிருக்காங்க. அதுக்காகத்தான் நம்முடைய இயக்கம் தொடர்ந்து மக்களை சிந்திக்க கூடியவர்களாக... தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிள்ளைகள் படித்து பட்டம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என நினைப்பது கேள்வி கேட்கணும் என்பதற்காகத்தான். அதனால் அது தவறில்லை.
நாம் செய்திருக்கக்கூடிய சாதனைகளை மக்களுக்கான திட்டங்களை நினைவு படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பாக ஓரணியில் தமிழ்நாடு முகாம் அமைந்திருக்கிறது. புதுமை பெண் திட்டம், தமிழ் புதல்வன்திட்டம், நான் முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, மகளிர்க்காண விடியல் பயணம், பள்ளிகளில் காலை உணவு திட்டம் என அரசின் எந்தெந்த திட்டங்கள் குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நினைவு படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்த ஓரணியில் தமிழ்நாடு திட்டம் அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு நிதி பிரச்சனைகளை உருவாக்கக்கூடிய ஒன்றிய அரசு, மருத்துவக் கல்வி கிடைக்காமல் செய்யக்கூடிய ஒன்றிய அரசு, நம்மீது இந்திய திணிக்க கூடிய ஒன்றிய அரசு, பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய நம்முடைய 39 உறுப்பினர்கள் கேள்வி கேட்கிறார்கள்.. சண்டை போடுகிறார்கள்.. அப்படின்னு நினைத்து அதை மக்கள் தொகை அடிப்படையில் குறைத்திட வேண்டும் என நினைக்கக் கூடிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யக்கூடியவர்களோடு கூட்டணி வைத்திருக்கக்கூடிய அதிமுக என இதைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்கக்கூடிய ஒரு வாய்ப்பு இந்த முகாமில் இருக்கிறது.
எதுவுமே புரியாமல் சிலபேர் நாங்கள் அடுத்து ஆட்சி அமைத்து விடுவோம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த அனுபவமும் கிடையாது. அவர்களுக்கு ஒன்றிய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் வித்தியாசம் தெரியலை. தேர்தலில் வாக்குறுதி கொடுத்ததை பற்றி கேட்கிறார்கள். கடந்த தேர்தலில் கூட, ஒன்றிய அரசில் ஆட்சி மாற்றம் வந்தால் செய்து தருகிறோம் என்று சொன்னோம். ஆனால் ஆட்சி மாற்றம் வரவில்லை. தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் மட்டும் ஆட்சி மாற்றம் வந்துவிடாது. ஆனால் பாவம்... அவர்களுக்கு அரசியல் அனுபவம் கிடையாது. இன்னைக்கு திடீர்னு வந்து அரசியலில் குதிச்சவங்களுக்கு எது மாநில ஆட்சியில் வரும். எது ஒன்றிய ஆட்சியில் வரும் என்கிற வித்தியாசம் கூட தெரியாமல் கேள்வி எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மக்களுக்கு எடுத்து சொல்லக்கூடிய வாய்ப்பு இந்த ஓரணியில் தமிழ்நாடு முகாமில் உள்ளது. இத்தனை நெருக்கடிகள் இத்தனை துரோகத்தை எல்லாம் சமாளித்து தாண்டி தமிழ்நாட்டுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றால் போராட வேண்டும் என்றால் நம்முடைய முதலமைச்சரை போல அனுபவம் இருக்கனும்.
ஒரு நீண்ட அனுபவம் இருக்கக்கூடிய ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு வாய்ப்பாக இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பல மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வாக்காளர் பட்டியலில் குழப்பம் செய்தே வெற்றி பெற்றிருக்கிறார்கள். டெல்லியில் முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதியில் ஆயிரக்கணக்கான ஓட்டுக்களை வெளியே எடுத்து புதிய வாக்குகளை உள்ளே சேர்த்து தான் ஒரு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். இதே மாதிரி மகாராஷ்டிரா, ஹரியானா என பல இடங்களில் இதே செயல்களை செய்து இருக்கிறார்கள். எனவே எத்தனை தடவையாக இருந்தாலும், எவ்வளவு வேலையாக இருந்தாலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகளை சரியாக செய்து தயாராக இருக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு. வாக்காளர் பட்டியல் தான் நம்முடைய வெற்றிக்கான முதல் படி என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். கட்சியினர் ஆர்வத்தை உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயமாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ. வி. மார்க்கண்டேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், ராதாகிருஷ்ணன், பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி