தமிழ்நாடு, இந்தி திணிப்புக்கு எதிராகவும், இருமொழி கொள்கையிலும் தனது உறுதியான நிலைப்பாட்டைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், மத்திய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு இருந்து வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது.
இந்த சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷா, “இந்த நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் கூடிய விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூக சூழல் உருவாகும் நாள் வெகு தூரம் இல்லை. உறுதியானவர்களால் மட்டுமே இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும். நமது நாட்டின் மொழிகள், நமது கலாச்சாரத்தின் ரத்தினங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லையென்றால், நாம் முழுமையான இந்தியர்களும் இல்லை. அந்நிய மொழிகளுடன் இந்திய மொழியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
இந்தியாவின் நாகரீகத்தையும், ஆன்மீகத்தின் வேர்களையும் வெளிநாட்டு மொழிகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. அரைகுறையான வெளிநாட்டு மொழிகளால், முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த போர் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்தியச் சமூகம் இதில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், சுயமரியாதையுடன் நமது சொந்த மொழிகளால் நாம் நமது நாட்டையும் வழி நடத்துவோம், இந்த உலகத்தையும் வழி நடத்துவோம். இதில் யாரும் சந்தேகப்படத்தேவையில்லை” என்று தெரிவித்திருந்தார்.
ஆங்கிலம் மொழி தொடர்பான அமித்ஷாவின் கருத்து நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ராஜ்பாஷா துறையின் வெள்ளி விழாவில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதியாக இருக்காது. இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன். எந்த வெளிநாட்டு மொழிக்கும் எதிர்ப்பு இருக்கக்கூடாது. ஆனால், நமது சொந்த மொழியை மிகைப்படுத்துவதற்கும், அதில் பேசுவதற்கும், அதில் சிந்திப்பதற்கும் முயற்சி இருக்க வேண்டும். அடிமைத்தன மனநிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும். ஒருவர் தனது சொந்த மொழியில் பெருமைப்பட்டு அதில் தன்னை வெளிப்படுத்தும் வரை, அந்த மன நிலையில் இருந்து நாம் விடுபட முடியாது. மொழி என்பது நாட்டினுடைய ஆன்மா. அனைத்து இந்திய மொழிகளையும் குறிப்பாக அதிகாரப்பூர்வ மொழிகளை நாம் பாதுகாத்து வளப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். நாம் நமது மொழியை உயிருடன் வைத்திருக்க வேண்டும். இது வெறும் தகவல் தொடர்பு பற்றியது அல்ல, நமது தேசத்தின் அடையாளத்தை பற்றியது” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி, “சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம்” என்று தெரிவித்துள்ளார்.