தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

அதேபோல் அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பாமக, தமாக, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் டெல்லி சென்ற திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி, நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி எம்.பி.யை சோனியா காந்தி இல்லத்தில் வைத்து இன்று (28.01.2026) சந்தித்துப் பேசியிருந்தார்.

இதில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திமுக காங்கிரஸ் இடையே சுமுகமான முடிவெடுக்கும் ஆலோசனைக் கூட்டமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காங்கிரசுக்கு வழங்கப்படும் தொகுதிகள் குறித்தும்,  அதேபோல அதிகாரத்தில் பங்கு தொடர்பான திமுகவின் நிலைப்பாட்டையும் ராகுல் காந்தியிடம் கனிமொழி தெளிவுபடுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைமையை திமுக மிக உயர்வாக பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பிப்ரவரி முதல் வாரத்தில் காங்கிரஸ்-திமுக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்ஐஏ செய்தி நிறுவனத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடாங்கர் நேற்று அளித்த பேட்டியில், ''திமுக இதுவரை தங்களை கூட்டணிக்காக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஏன் இந்த தாமதம் என தெரியவில்லை. திமுகவின் பதிலுக்காக காத்திருக்கிறோம்'' என தெரிவித்திருந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி -கனிமொழி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இன்னும் ஒரு சில வாரங்களில் ராகுல்காந்தி ஸ்ரீபெரும்புதூர் வர உள்ள நிலையில் அவரது தமிழக வருகைக்கு முன்னரே திமுக- காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.