கரூர் அருகேயுள்ள கோடங்கிபட்டியில் இன்று (17.09.2025) திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றும் செப்டம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது என்பதால், இம்மூன்று நிகழ்வையும் சேர்த்து, ஆண்டுதோறும் திமுக சார்பில் முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் தந்தை பெரியார் விருது பெற்ற திமுகவின் துணை பொதுச் செயலாளரும், திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி. பேசுகையில், “ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையிலே ஒரு கனவு இருக்கும். எனக்கு இருக்கக்கூடிய ஒரே கனவு அது கலைஞர் பெற்ற அதே பெரியார் விருதை இன்று நான் பெற்றிருக்கிறேன். அதை நிறைவேற்றித் தந்திருக்கக்கூடிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொட்டக்கூடிய மழையிலும் இங்கே நின்று கொண்டிருக்கக்கூடிய திமுக தொண்டர்களை (உடன்பிறப்புகளை) பார்க்கும் பொழுது இந்த படை போதுமா?. எந்தத் தேர்தலையும் எந்தப் பகைவர்களாக இருந்தாலும் அது நம்முடைய (திமுகவின்) பரம்பரை பகைவர்களாக இருக்கட்டும், பாரம்பரிய பகைவர்களாக இருக்கட்டும், புதிதாக வரக்கூடியவர்களாக இருக்கட்டும் அத்தனையையும் வென்று காட்டுவோம். வென்று காட்டுவோம் என்று சூளுரைக்கக் கூடிய இந்த படை போதும் வெற்றி நிச்சயம்” எனப் பேசினார்.