புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி கீரமங்கலத்தில்  'தமிழ்நாடு தலைகுனியாது' பொதுக்கூட்டம் நேற்று (09.02.2026) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல வளர்ந்து வந்த இயக்கமாக திமுக இருக்கிறதே தவிர வேறு ஒன்றும் கிடையாது. அனைவரும் திமுகவில் இருந்தவர்கள் இல்லை. ஒரு காலத்தில் காங்கிரஸ் 1967ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது. இப்போது ஆட்சிக்கு வர முடியுமா?. இதனைச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். கூட்டணியில் இருக்கிறார்கள். காங்கிரஸில் இருப்பவர்களில் ஒரு சிலர் உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்” எனப் பேசியிருந்தார். 

Advertisment

இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், “காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை தொடர்பாக சர்ச்சையாக திமுகவில் உள்ள முக்கியமானவர்கள் பேசிக் கொண்டே வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் திமுக இருப்பதாகக் கூறப்படுகிறது” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குக் கனிமொழி, “அப்படி ஒன்றும் இல்லை. தனி நபர்கள் பேசுவதற்கெல்லாம் கட்சி  பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது. திராவிட முன்னேற்றக் கழக தலைமைக்கும் காங்கிரஸ் தலைமைக்கும் ஒரு இணக்கமான நல்லுறவு இருக்கிறது. 

Advertisment

அதனால் கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் இரண்டு பேரும் (முதல்வர் மு.க. ஸ்டாலின், ராகுல்காந்தி எம்.பி.) ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொண்டுள்ளனர். எனவே வரக்கூடிய தேர்தலில் நிச்சயமாக இணைந்து செயல்படுவோம்” எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர், “இதுவரைக்கும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குக் கனிமொழி, “விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனால் தேர்தல் குழு நிச்சயமாக அறிவிக்கப்படும்” எனப் பேசினார்.