Advertisment

“மசோதாக்களைக் காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு அனுப்புவது மட்டுமே ஆளுநரின் பணி” - கனிமொழி எம்.பி.!

kanimozhi-mic

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மே 15ஆம் தேதி அனுப்பி இருந்தார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று (20.11.2025) அறிவிக்கப்பட்டது. 

Advertisment

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா மற்றும் சந்திரசேகர் என 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. அதில், “மசோதாவை ஆளுநர் தாமதிப்பது கூட்டாட்சிக்கு எதிரானது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையில் ஆளுநர்கள் இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை மேற்கொள்ள கூடாது. காரணம் எதுவும் கூறாமல் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. 

Advertisment

ஒரு மாநிலத்தில் இரு நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக்கூடாது. மாநில மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசும், அமைச்சரவையுமே முடிவு செய்யும் இடத்தில் இருக்கும். அமைச்சரவை அனுப்பும் மசோதாவை ஏற்பதுதான் ஆளுநரின் முதல் வாய்ப்பு. அரசியல் சாசன அமர்வுப்படி ஆளுநருக்கு மூன்றே வாய்ப்புகள் தான் உள்ளன. மத்திய அரசு கூறுவதுபோல ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4வது வாய்ப்பு இல்லை. அதாவது அமைச்சரவை அனுப்பும் மசோதாவை ஏற்பதுதான் ஆளுநரின் முதல் வாய்ப்பு ஆகும். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது 2வது வாய்ப்பு ஆகும். 

sc

மேலும், மசோதாவை சட்டப்பேரவைக்கே மீண்டும் திருப்பி அனுப்புவது 3வது வாய்ப்பு. அதே சமயம் மத்திய அரசு கூறுவதுபோல் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4வது வாய்ப்பு ஆளுநர்களுக்கு இல்லை. வேறுபாடுகளைத் தீர்க்க மாநில அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆளுநர் செயல்படாமல் இருந்தால் அரசியல் அமைப்பு, நீதிமன்றங்கள் அதனை ஆய்வு செய்யும். பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதாவை ஆய்வுசெய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவதுதான். 

ஆளுநரின் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும் ஒரு மசோதா மீது நீண்ட காலம் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் இருந்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வு செய்யலாம். அதே சமயம்  மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என நீதிமன்றம் அறிவுறுத்த முடியும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை நீதிமன்றம் எடுப்பது ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரானது” எனத் தெரிவிக்கப்பட்டது.

raj-bhavan-rn-ravi

இந்நிலையில் இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “‘உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?’ என்று கேட்டபோது, ‘கவர்னர் வேலை பார்ப்பது’ என்று கலைஞர் பதிலளித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும் மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் மீண்டும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. இனியேனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Droupadi Murmu judgement kanimozhi RN RAVI Supreme Court
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe