கோப்புப்படம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேசத் தாய்மொழி நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தாய் மொழி மற்றும் பண்பாட்டுப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதும், அழிந்து வரும் மொழிகளைப் பாதுகாப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். கடந்த 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி, அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) வங்க மொழியை அரசு மொழியாக அங்கீகரிக்கக் கோரி போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த மொழிப் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேச தாய்மொழி நாள் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 1999ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சர்வதேச தாய்மொழி நாள், உலகம் முழுவதும் அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் சர்வதேச தாய்மொழி தினம் இன்று (21.02.2026) கொண்டாடப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன். தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/21/eps-valluvar-cray-2026-02-21-15-28-48.jpg)
அதோடு காவி உடை அணிந்த நிலையில் திருவள்ளுவர் படத்தையும் அந்த பதிவில் இணைத்திருந்தார். அதன் பின்னர் அந்த படத்தை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இந்நிலையில் இதனைச் சுட்டிக்காட்டி திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜக மீதான விசுவாசம் எடப்பாடி பழனிசாமியை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்” எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.
Follow Us