சென்னை சங்கமம் நிகழ்ச்சி நாளை (14.01.2025) தொடங்க உள்ளது. இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் அலங்கார ஆடை அணிவகுப்பு எழும்பூர் அருங்காட்சியகத்தில் காணும் பொங்கலன்று நடைபெறுகிறது. சென்னையில், தை மாதம் தொடக்கத்தில் பொங்கல் திருவிழாவின் போது 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கலை நிகழ்ச்சிகள் 14.1.2026 அன்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. 

Advertisment

தொடக்க விழாவை அடுத்து, 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகள் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 20 இடங்களில் ஜனவரி 15 முதல் 18 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. எனது முன்னெடுப்பில் நடைபெறும் சென்னை சங்கமத்தில் முதன்முறையாக கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் அலங்கார ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி ஜனவரி 17ஆம் நாள் சனிக்கிழமை காணும் பொங்கலன்று சென்னை அருங்காட்சியகத்தின் வளாகத்தில் தேசிய கலைக்கூடம் முன்புறம் மாலை 6.00 மணியளவில் நடைபெறுகிறது.

Advertisment

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கலைஞர்கள் பத்மஸ்ரீ விருது பெற்ற பறை ஆசிரியர் பிரபா, அலங்காநல்லூர் வேலு ஆசான், சிலம்பம் ஐஸ்வர்யா மணிவண்ணன், கானா நடன இயக்குநர் அனுஷா விஸ்வநாதன், நடன கலைஞர்கள் காளி வீரபத்திரன் மற்றும் திருநங்கை பொன்னி, கரகக்கலைஞர்கள் கலைமாமணி தேன்மொழி இராஜேந்திரன் மற்றும் கோவை அனுஷா, பிரபல மக்கள் இசை பாடகிகள்-இசைவாணி மற்றும் சுகந்தி, பாடகர் ஜெயசித்தன், கானா-முத்து, காவடி ஆட்டக்கலைஞர் சுந்தரமூர்த்தி. காளை ஆட்டக்கலைஞர் இராஜன், கட்டை கூத்துக்கலைஞர் திலகவதி மற்றும் பலர் இந்த மரபார்ந்த உடைகளுக்கான அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்கவுள்ளனர். 

chennai-sangaman-mks-prize
கோப்புப்படம்

இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்வின் போது அந்தந்த கலைஞர்களின் தனி நிகழ்வும் விழா மேடையில் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டின் பெருமை வாய்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் ஆடைகள் அணிந்து கலைஞர்கள் கலந்துக் கொள்ளும் அலங்கார ஆடை அணிவகுப்பு நடைபெறுகிறது” இந்த பத்திரிகையாளர்களை சந்திப்பின் போது, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் கவிதா ராமு, கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் ச. வளர்மதி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், கனிமொழி வழங்கினார். 

Advertisment