சென்னை எழும்பூரில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட "முன்னேற்றப் பாதையில் முப்பெரும் விழா" நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி., "முன்னேற்றப் பாதையில் முப்பெரும் விழா, பெண்களுக்கு செல்வம் பெருகும் பெருமையை வழங்கும் கழகம் என்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மிக அதிக அளவில் கலந்து கொண்டுள்ளீர்கள். அரங்கம் முழுவதும் பெண்களால் நிரம்பி இருப்பதைப் பார்க்கிறேன். இப்படிப்பட்ட மேடையை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. பொதுவாக மேடையைப் பார்த்தீர்களானால், ஒரு பெண் கூட இருக்கமாட்டார்கள்; இருந்தாலும், பெயருக்கு ஒரு பெண் இருக்க வேண்டும் என்பதற்காக ஒருவரை வைத்திருப்பார்கள். ஆனால், இன்றைய இந்தக் காட்சி, பெண்கள் முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சி, இதைப் பார்க்கும்போதே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஒரு சிறப்பான தருணமாக இருக்கிறது.
ஒரு காலகட்டத்தில், பெண் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, படிக்கக்கூடாது, வேலைக்குச் செல்லக்கூடாது, சமையல் அறையைத் தாண்டி வேறு எதையும் சிந்திக்கக்கூடாது என்று கட்டுப்படுத்தப்பட்டார். வீட்டில் இருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, வாழ்க்கை முழுவதும் அடிமையாக மட்டுமே வாழ வேண்டும் என்ற நிலை அந்தக் காலத்தில் இருந்தது.
ஆனால், அந்தக் காலகட்டத்தைத் தாண்டி, இன்று கல்வியில் சாதித்தவர்கள், அரசியல் அதிகாரம் பெற்றவர்கள், பல பொறுப்புகளை வகிக்கும் ஆற்றல் பெற்றவர்கள், தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் முன்னே வந்து நிற்பவர்கள், இப்படி பல பெண்கள் இந்த அரங்கில் நிரம்பியிருக்கிறீர்கள்.
அடுத்த தலைமுறையைப் படிக்க வைத்து, தன்னம்பிக்கையுடன் சொந்தக் காலில் நிற்கச் செய்பவர்கள் நீங்கள். இன்று உங்களைப் பார்க்கும்போது, பெண்களின் வளர்ச்சியின் பெருமையை உணர்கிறேன். அதற்குக் காரணம் திராவிட இயக்கம்; அதற்குக் காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெருமையோடு நாம் இன்று இந்த மேடையில் நிற்கிறோம்.
ஒரு முறை, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் ஒருவர், தந்தை பெரியாரைச் சந்தித்து, இந்த நாட்டில் அதிகமாக மக்கள் தொகை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதை எப்படிக் குறைப்பது என்று தெரியவில்லை. இவ்வளவு மக்கள் தொகை பெருகிக் கொண்டே சென்றால், மக்களுக்கான திட்டங்களும் செலவுகளும் பெருகும். மக்களுடைய வாழ்க்கை வளம் பெற மிகப் பெரிய சவாலாக மாறிவிடும் என்று கூறினார்.
அதற்கு தந்தை பெரியார், ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கிடைத்துவிட்டால், மக்கள் தொகை குறைந்து விடும்’ என்றார். அந்த ஒன்றிய அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இதற்கும், அதற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?’ என்று கேட்டார்.
அதற்கு பெரியார், ‘ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டியதில்லை. பெண் குழந்தை பிறந்தாலே போதும்; ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகளில் நிறுத்திக் கொள்வார்கள். ஏனெனில், அந்தப் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. அதனால், குடும்பங்கள் அதிகமான குழந்தைகள் பெறுவதை நிறுத்திக் கொள்வார்கள்’ என்று விளக்கினார். அதைச் சட்டமாக்கியவர் கலைஞர்.
இன்று, தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைந்து இருக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு, நம்முடைய மக்கள் பிரதிநிதிகளைக் குறைத்துவிட வேண்டும் என்று ஒன்றிய பாஜக கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதை எந்தக் காலத்திலும் நடக்க விடமாட்டேன் என்று சூளுரைத்து இருக்கக்கூடிய ஆட்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
தந்தை பெரியாரின் வழியில், அவரது கனவுகளையும் லட்சியங்களையும் கருத்துகளையும் மனதில் சுமந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் நாம் என்ற பெருமையோடு, இன்று இந்த மேடையில் நின்று கொண்டிருக்கிறோம்.
வீட்டிலேயே இருந்த பெண்களையும், ‘எங்களாலும் சம்பாதிக்க முடியும்’ என்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் சுய உதவிக் குழு திட்டம். அந்தத் திட்டத்தின் வழியாகத் தன்னம்பிக்கை பெற்ற பெண்களே, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டவர்கள்.
இந்த சுய உதவிக் குழுக்களுக்கு, அமைச்சராக இருந்தபோது மு.க. ஸ்டாலின் சுழல் நிதியை வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி வந்த பிறகு, நிலுவையில் இருந்த இந்த சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 2,018 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கடன் உச்சவரம்பு 20 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. மொத்தமாகக் கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களில் இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு, இத்தனை சாதனைகளைச் செய்திருக்கக்கூடிய ஆட்சி நம்முடைய ஆட்சி.
42 சதவீதம் இந்தியாவிலேயே பெண்கள் உழைக்கக்கூடிய மாநிலம், பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என்று அந்தப் பெருமை நமக்கு இருக்கிறது.நாங்கள் கொடுத்த வாக்குறுதியை முக்கால்வாசி நிறைவேற்றியிருக்கிறோம். கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சி, அது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. காலை உணவுத் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் இல்லை. ஆனால், அந்தப் பிள்ளைகள் மதியம் வரை பசியோடு இருக்கக்கூடாது. ஒரு தாயாக நின்று, காலை உணவுத் திட்டத்தை நமக்காக உருவாக்கி வழங்கிய முதலமைச்சர்.
எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்கள், இனிமேல் எந்தக் காலகட்டத்திலும் பாஜகவோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு, தேர்தல் வந்தவுடன், மறுபடியும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டார்கள்.எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த நான்கு ஆண்டுகளாக எங்கு இருந்தார் என்று தெரியவில்லை. திடீரெனத் தேர்தல் வந்தவுடன், பஸ்ஸில் பயணம் செய்கிறார். அந்தப் பஸ்ஸுக்கும், முதலமைச்சர் ஒருவர் பெயர் வைத்துள்ளார்!அந்தப் பேருந்தில் ஏறிக் கொண்டு வருகிறார். ‘நீங்கள் என்ன பண்ணுவீர்கள்?’ என்று கேள்வி கேட்கிறார். நீங்கள் நான்கு வருடமாக ஆளைக் காணவில்லை, நாங்கள் என்ன செய்தோம் என்றுகூட உங்களுக்குத் தெரியவில்லை.
உங்கள் கட்சி அலுவலகத்தை டெல்லிக்கு மாற்றிவிட்டீர்கள் என்று கவலையோடு சொல்கிறோம். அதற்கு, அவர் எனக்குப் பதில் சொல்லியிருக்கிறார்.அதிமுக அலுவலகம் சென்னையில் தான் இருக்கிறது, வந்து பாருங்கள் என்று சொல்கிறார். கட்டிடம் அங்குதான் இருக்கிறது என்று எனக்குத் தெளிவாகத் தெரியும். கட்டிடத்தை டெல்லிக்கு எடுத்துச் செல்ல முடியுமா? ஒருவேளை, முடியுமானால் பிரித்துக் கொண்டு போவீர்கள்.கைக்குட்டையை வைத்துக்கொண்டு முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தாலும், நீங்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. உங்களுக்கு அவமானமாக இருக்கலாம், உண்மையாகவே கட்டிடம் அங்கே இருக்கிறது. ஆனால், அலுவலகத்தின் அதிகாரம் டெல்லியின் கைகளில் உள்ளது. அதுதான் உண்மை.
நாங்கள் தான் அறிவாலயத்தைக் காப்பாற்றினோம் என்று எதிர்க்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், அறிவாலயத்தைக் காப்பாற்ற யாரும் வர வேண்டியதில்லை; கழகத்தின் உடன்பிறப்புகளே இருக்கிறார்கள். அவர்கள் அறிவாலயத்தைக் காப்பாற்றுவார்கள்.ஒரு கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று திமுகவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் கபில் சிபல் சொன்னார். கலைஞர் அவர்களிடம் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னார்.ஒரு கட்சியை எப்படி நடத்துவது என்பதை கலைஞரிடமும், திமுகவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார். கம்பராமாயணத்தை யார் எழுதினார் என்று மாற்றிவிட்டீர்கள், அதைப் போல, இதையும் மாற்ற முடியாது.சரித்திரம் உங்களுக்கு மறந்து போயிருக்கலாம். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அது என்றும் மறக்காது," என்றார்.