மதுரை தமுக்கம் மைதான மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று (13/09/2025) விழாவில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, ‘தெற்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

Advertisment

நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., “தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சம்ஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்றுக்கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.

தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில், ஹிந்தி திணிப்பு ஏற்பட்டபோது, இங்கு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால்தான், தமிழ் மொழி மட்டுமன்றி, அதன் பண்பாடும், கலாசாரமும் இன்னும் பின்பற்றப்படுகிறது. நம் மொழி தமிழ்நாடு மட்டுமன்றி, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது. நமது முன்னோர்கள் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தினர் என்பதை உரிய சான்றுகளுடன் நிரூபித்துள்ளோம். எனவே, இனி உலக வரலாறு எழுத வேண்டுமெனில், தமிழகத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறையை நீக்கி, கோயில்களை ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சிலர் பேசி வருகின்றனர். அனைவரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதற்காக, கடந்த 1939-ம் ஆண்டு முதன்முதலில் மதுரையில் போராடியவர் வைத்தியநாதய்யர். தொடர்ந்து, பெரியார் உள்ளிட்ட எண்ணற்ற திராவிட இயக்கத்தைச் சேர்ந்தோர் போராடினர். சமூக நல்லிணக்கம், பெண் கல்வி, திராவிட இயக்க வளர்ச்சிக்காக முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி போன்றோரும் போராடினர். இதன் விளைவாகத்தான் இன்றளவும் தமிழகத்தில் தமிழரின் பண்பாடு தொடர்ந்து வருகிறது.

Advertisment

தமிழ் மன்னர்கள் கடல் கடந்தும் வணிகத்தில் சிறந்து விளங்கினர். இதேபோல, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து அந்த நாடுகளிலிருந்து முதலீடுகளை ஈர்த்து வருகின்றார். பண்டைய காலத் தமிழர்கள் போரில் வெற்றி பெற்றாலும், அந்த நாட்டு மக்களையும், அவர்களது பண்பாட்டையும் சிதைக்கவில்லை. ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் தமிழர்களுக்கு கிடையாது. இதேபோல, தமிழர்களை யாரும் அடிமைப்படுத்தவும் இயலாது. தமிழகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கமாக திராவிட இயக்கங்கள் திகழ்கின்றன. நிலவுக்கு முதலில் சென்றவர் யார் என்று கேட்டால், குழந்தைகள் ‘நீல் ஆர்ம்ஸ்ட்ராங்’ என்று சரியான பதிலைச் சொல்வார்கள். ஆனால், வடக்கில் உள்ள சில தலைவர்களிடம் கேட்டால் வேறு பதில் வரும்.

தமிழ்நாட்டில், நிலவில் பாட்டி உள்ள கதையை குழந்தைகளிடம் சொல்வோம். நல்ல வேலை, அந்தக் கதைகள் அவர்களுக்கு தெரியாது. இல்லையெனில், நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்று சொல்வார்கள். மேலும், அந்தப் பாட்டி இன்னும் நிலவில் இருக்கிறார், திரும்பி வரவே இல்லை என்றும் கூட கூறிவிடுவார்கள். அனுமன் தான் முதலில் நிலவுக்குப் போனவர் என்று கதை சொல்லிக்கொண்டிருக்கக் கூடியவர்கள், இந்தத் தமிழ்நாட்டில் தலைவராக இல்லை,” என்று பேசினார். முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., “விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. விஜயின் அரசியல் வருகையால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் அரசியல் செய்ய நினைக்கும் யாரும் அண்ணா, பெரியார் ஆகியோரின் வழியையும், அவர்களின் சிந்தனையையும் தவிர்க்க முடியாது,” என்றார்.

தொடர்ந்து, புத்தகக் காட்சி அரங்குகளை கனிமொழி எம்.பி. பார்வையிட்டு, புத்தகத் தானப் பெட்டிக்கு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்வில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மதுரை மாநகர் திமுக மாவட்டச் செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ., மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் பர்வீன் சுல்தானா, திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.