குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி (09.09.2025) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குடியத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து குடியரசு துணைத் தலைவரை நியமிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது ஆளுங்கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகவும், எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி சார்பாகவும் தனித்தனி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (17.08.2025) அறிவிக்கப்பட்டார்.
அதேசமயம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டனியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது ஒரு சித்தாந்தப் போராட்டம். எனவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வரும் வேட்பாளருக்கு எதிராக ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தன. எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்துள்ள வேட்பாளர் அரசியலமைப்பை மதிக்கும் வேட்பாளர்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு வேட்பாளர் (பாஜக) இருக்கிறார் என்பதற்காக, நீங்கள் தமிழ்நாடு, தமிழ் மொழி அல்லது மாநிலத்தின் மதிப்புகள் மீது அக்கறை கொண்டிருப்பதாக அர்த்தமல்ல. சுதர்சன் ரெட்டி நீதிபதியாக இருந்தபோது இந்திய மக்களுக்காக அவருடைய பல தீர்ப்புகள் மக்களுக்கான தீர்ப்புகளாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தாங்கி பிடிக்கக்கூடிய தீர்ப்புகளாக இருந்துள்ளன. அவர் ஓய்வு பெற்ற பிறகும் இன்று இருக்கக்கூடிய பாஜக, இந்துத்துவ அரசியலை எதிர்த்துப் பேசக்கூடிய ஒருவராக அவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனால் அவரை எல்லோரும் ஒருமித்த கருத்து தோடு தேர்ந்தெடுத்துத் தேர்தலில் நிறுத்தி இருக்கிறோம் ” எனத் தெரிவித்தார்.